மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனைத் தொடர்ந்து டெல்லியின் போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெலோட் இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராகினார்.
இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மார்ச் 21-ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து கைலாஷுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. டெல்லியின் நஜஃபகர் தொகுதியின் எம்எல்ஏவாக இருக்கும் கைலாஷ், கடந்த 2021 – 22ல் உருவாக்கப்பட்டு, தற்போது கைவிடப்பட்டிருக்கும் மதுபான கொள்கை வரைவு குழுவின் ஓர் அங்கமாக இருந்துள்ளார்.
அமலாக்கத்துறையின் கூற்றுப்படி, பின்னர் அந்த வரைவு ‘சவுத் குரூப்’க்கு கசிய விடப்பட்டது. மேலும் கெலோட், மதுபான கொள்கை வரைவின் போது தனது வீட்டை ஆம் ஆத்மி கட்சியின் அப்போதைய செய்தித் தொடர்பாளர் விஜய் நாயரை பயன்படுத்த அனுமதித்தார். முன்னதாக கைலாஷ் கெஹ்லோட் தனது மொபைல் எண்ணைத் தொடர்ந்து மாற்றிக்கொண்டே வந்துள்ளார் என்றும் அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது.
டெல்லி மதுபானக் கொள்கை தொடர்புடைய பணமோசடி வழக்கில் மார்ச் 21-ம் தேதி கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், ஏப்.1ம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் வைக்கப்பட்டுள்ளார். முன்னதாக அவர் மார்ச் 28 தேதி வரை இருந்த காவலை ரோஸ் அவென்யூ நீதிமன்றம் மேலும் நான்கு நாட்கள் நீட்டித்தது.
கேஜ்ரிவாலைத் தவிர இதே வழக்கு தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயின், மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.