பிஹாரில் மக்களவைத் தேர்தலுக்கான இந்தியா கூட்டணி தொகுதிப் பங்கீடு நிறைவு – ஆர்ஜேடி 26, காங். 9, இடது 5

பிஹார் மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்கான இந்தியா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் 26 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 9 இடங்களிலும், இடதுசாரிகள் 5 இடங்களிலும் போட்டியிடுகின்றன.

பிஹார் மாநிலத்தில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கான இந்தியா கூட்டணி பேச்சுவார்த்தையில் தற்போது ஐக்கிய ஜனதா தளம் வசமுள்ள பூர்ணா மற்றும் ஹாஜிபூர் தொகுதிகள் பெரும் சிக்கலை ஏற்படுத்தின. இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத ஆர்ஜேடி பிரமுகர் ஒருவர் கூறுகையில், “கதிஹார் தொகுதி குறித்த பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி இடையே இன்னும் சிக்கல் நீடித்து வருகிறது.

அதேபோல் பூர்ணாவில் ஆர்ஜேடி போட்டியிட விரும்புகிறது. காங்கிரஸ் கட்சியும் அந்தத் தொகுதியை விரும்புகிறது. எங்களது கட்சி காங்கிரஸுக்கு 8 முதல் 9 தொகுதிகள் கொடுக்கத் தயாராக இருக்கிறது என்றாலும் பூர்ணா தொகுதியின் மீதான எங்களின் உரிமையை விட்டுத்தர முடியாது” என்று தெரிவித்திருந்தார்.

பிஹாரில் இந்தியா கூட்டணிகளுக்கு இடையேயான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதாக கூறப்பட்ட செய்தியை ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் மறுத்திருந்த சில நாட்களுக்குப் பின்னர் தற்போது இறுதி செய்யப்பட்ட தொகுதிப் பங்கீடு விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் 26 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 9 இடங்களிலும், இடதுசாரிகள் 5 இடங்களிலும் போட்டியிடுகின்றன.

தொகுதிப் பங்கீடு குறித்து காங்கிரஸ் தலைவர் முகுல் வாஸ்னிக் வீட்டில் செவ்வாய்க்கிழமை நடந்த இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு இடையேயான கூட்டத்தில் தேஜ்ஸ்வி யாதவ் கலந்து கொண்டார். பின்னர் அவர், “காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், இடதுசாரிகள் இணைந்து பிஹாரில் மக்களவைத் தேர்தலைச் சந்திக்கின்றன” என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பிஹாரில் முதல் கட்டமாக தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற உள்ள 4 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று நிறைவடைந்தது. ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி ஏற்கெனவே 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பிஹாரில் உள்ள 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 என ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடக்க இருக்கிறது. கடந்த 2019 மக்களைத் தேர்தலில் பாஜக – ஐக்கிய ஜனதா தளம் அடங்கிய என்டிஏ கூட்டணி 39 இடங்களிலும், காங்கிரஸ் 1 இடத்திலும் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.