தேர்தல் நடைபெறும் எந்தவொரு நாட்டையும் போலவே இந்தியாவிலும் அனைவரது உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று விரும்புவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
செய்தியாளர் சந்திப்பில் கேஜ்ரிவால் கைது, காங்கிரஸ் வங்கி கணக்குகள் முடக்கம் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக், “தேர்தல் நடைபெறும் எந்தவொரு நாட்டையும் போலவே இந்தியாவிலும் அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் உட்பட அனைவரின் உரிமைகளும் பாதுகாக்கப்பட்டு சுதந்திரமான மற்றும் நியாயமான சூழ்நிலையில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்றார்.
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை கைது செய்தது. இதற்கு நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும், அரவிந்த் கேஜ்ரிவால் கைது விவகார வழக்கு நியாயமாக நடைபெற வேண்டும் என்று அண்மையில் அமெரிக்கா கருத்து தெரிவித்திருந்தது. முன்னதாக இதே விவகாரத்தில் ஜெர்மனியும் கருத்து தெரிவித்திருந்தது. அமெரிக்கா மற்றும் ஜெர்மனியின் இந்த கருத்துக்கு இந்தியா தனது கண்டனத்தைப் பதிவு செய்தது.