புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இந்தியா கூட்டணி சார்பாக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. சிவகங்கை நாடாளுமன்ற வேட்பாளர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார். கார்த்தி சிதம்பரத்திற்கு ஆதரவு கேட்டு செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசுகையில்; 10 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் எந்த ஒரு மாநிலத்திலாவது பெரும்பான்மையுடன் ஆட்சியில் உள்ள முதலமைச்சர்கள் யாராவது கைது செய்யப்பட்டதாக வரலாறு உண்டா. ஆனால், பாஜக ஆட்சியில் ஜார்கண்ட் முதல்வர், புதுதில்லி முதல்வர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இந்த சம்பவங்களை எல்லாம் நமக்கான எச்சரிக்கையாக பார்க்க வேண்டும். மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் அது ஜனநாயகத்திற்கே பேராபத்து ஆகிவிடும். அரசியல் கட்சிகளுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு உள்ள நிலையில், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு செய்த சிறு பிழையை வைத்துக்கொண்டு,காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரி, அபராதம், தண்டம் விதிப்பு என ரூ.1821 கோடி செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை சம்மன் அனுப்பி காங்கிரஸ் கட்சியை பாஜக முடக்க நினைக்கிறது.
மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் 5 ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் வரும் என்பதையே மறந்து விட வேண்டும். மாறாக ஒரே நாடு ஒரே தேர்தல் என்பார்கள் பின்னர் ஒரே கட்சி, ஒரே ஆட்சி என்று ஒரே தலைவர் மோடி தான் என்று சொல்லிவிடுவார்கள். ரஷியா உள்ளிட்ட நாடுகளைப் போல எதிர்கட்சியே இல்லாமலும்,தேர்தலை ஒரு சடங்காக நடத்திவிட்டு ஆட்சியில் அமர நினைக்கிறார் மோடி.காங்கிரஸ் கட்சியை அழித்துவிட்டு, மாநில கட்சிகளை அடிமையாக்கிவிடலாம் என்ற எண்ணத்தின் வெளிப்பாடே காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம், தற்போது, வருமான வரித்துறை சம்மன் என தொடர்ந்து ஜனநாயக விரோதப்போக்கை பாஜக கையாளுகிறது.தற்போது, மீண்டும் மோடி வாக்குறுதிகளை அளித்து வருகிறார்.
ஆனால், கடந்த தேர்தலின் போது, அவர் அளித்த ரூ.15 லட்சம் ரொக்கத்தை தரவில்லை.கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் பலமடங்கு விலைவாசி உயர்ந்துள்ளது, பெட்ரோல்,டீசல் விலை உயர்வு என மக்கள் நலனில் அக்கறையின்றி ஆட்சி நடத்திவிட்டு, தற்போது, மீண்டும் வாக்குறுதியை அளிக்கின்றனர். அதை மக்கள் ஏற்கமாட்டார்கள். ஜனநாயகத்தை காக்க திமுக-காங்கிரஸ் கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்றார்.கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி,சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை,முன்னாள் எம்எல்ஏ ராமசுப்புராம்,ஒன்றிய செயலாளர் தங்கமணி,நகர காங்கிரஸ் தலைவர் அரங்குளவன் மற்றும் இந்தியா கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனா்.