தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் சீனியாரிட்டி பட்டியல் தயாரித்து தாசில்தார்களுக்கான காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தின் மூலம் உதவியாளர்களாக நியமிக்கப்பட்ட சீனிவாசன், சுகுமார், ஏழுமலை உள்ளிட்ட 14 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘கடந்த 2008-ம் ஆண்டு ஆட்சியர் அலுவலகத்தில் உதவியாளர்களாக நியமிக்கப்பட்ட எங்களை, சீனியாரிட்டி அடிப்படையில் உதவி தாசில்தார்களை நியமிக்க வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டார்.
பின்னர் அந்த உத்தரவு மாற்றப்பட்டு மீண்டும் மாவட்ட அளவில் புதிய பட்டியல் தயாரித்து பணிநியமனம் வழங்க உத்தரவிடப்பட்டது. அதன்படி தயாரிக்கப்பட்ட பட்டியலில் உரிய தகுதிகள் இல்லாதவர்களை 2019-20ல் துணை தாசில்தார்களாக நியமிக்க கிருஷ்ணகிரி ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
பின்னர் 2012-22-ல் தேர்வு வாரியத்தால் நியமிக்கப்பட்ட தங்களை நிராகரித்துவிட்டு தகுதி இல்லாமல் நியமிக்கப்பட்டவர்களை தாசில்தார்களாக நியமிக்க ஆட்சியர் உத்தரவிட்டார். இது குறித்து வருவாய் ஆணையருக்கு புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தங்களை நிராகரித்த மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்து, பணிநியமனம் வழங்க உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில், “பணிநியமனம் செய்தபோது அனைவரும் உதவியாளர்களாக இருந்ததால் துணை தாசில்தார்களாக நியமிக்கவில்லை” என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்தார். மேலும், தேர்வு வாரியத்தால் பணியில் சேர்ந்தவர்களின் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் புதிய பட்டியலை தயார் செய்து 4 வாரங்களில் பணி நியமனம் நடைபெற வேண்டும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.