தமிழ்நாடு, கேரளாவில் மட்டும் ரயில்வே ஊழியர்களுக்கு தபால் வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ள நிலையில், அதனை மறுபரிசீலனை செய்ய மத்திய தேர்தல் ஆணையத்துக்கு எஸ்ஆர்எம்யூ கடிதம் எழுதியுள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு தொகுதியிலும் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க, தபால் ஓட்டுப் பதிவுக்கு தேர்தல் ஆணையம் முக்கியத்துவம் வழங்குகிறது. தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மட்டுமே இருந்த தபால் வாக்குப் பதிவு என்பது ரயில்வே மற்றும் அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கும் கிடைக்க கோரிக்கை எழுந்தது. இதைத் தொடர்ந்து ரயில்வே தொழிலாளர்கள் மற்றும் அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கும் தபால் வாக்கு பதிவுக்கு அனுமதி வழங்கி 2021 ஜனவரியில் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 19-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில், தமிழகம், கேரளவிலுள்ள ரயில்வே ஊழியர்களுக்கு தபால் வாக்குரிமையும் இல்லை என குறிப்பிட்டுள்ளது. இதனால் தேர்தல் நாளன்று பணியிலுள்ள ரயில் ஓட்டுநர், உதவி ஓட்டுநர்கள், ரயில் மேலாளர் மற்றும் ஓடும் ரயிலை சார்ந்து பணி புரியும் ஊழியர்களும் தங்களது வாக்குகளை செலுத்த முடியாத சூழல் ஏற்படும். இது, 100 வாக்குப்பதிவுக்கு பின்னடைவாகும். தேர்தல் ஆணைய உத்தரவால் தமிழகம், கேரளாவில் பணியிலுள்ள ரயில்வே ஊழியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக எஸ்ஆர்எம்யூ ரயில்வே தொழிற்சங்க மதுரை கோட்ட உதவி கோட்ட செயலாளர் ராம்குமார் கூறியது: ”கர்நாடகா, ஆந்திரா போன்ற பிற மாநிலங்களில் பணிபுரியும் ரயில்வே ஊழியர்கள் தபால் வாக்கு செலுத்தும் நிலையில், தமிழகம், கேரளாவில் மட்டும் பணியிலுள்ள ரயில்வே ஊழியர்கள் தபால் வாக்களிக்க முடியாத சூழலை தேர்தல் ஆணையம் ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் இரு மாநிலத்திலும் பிற மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள் தபால் வாக்கு உரிமை இருக்கும் பட்சத்தில் ரயில்வே தொழிலாளர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. நூறு சதவீதம் வாக்குப்பதிவுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தேர்தல் ஆணையம் நடத்துகிறது.
கடந்த 2021ல் சட்டமன்ற தேர்தலில் ரயில்வேத் துறையில் ஓடும் தொழிலாளர்கள், டிக்கெட் பரிசோதகர்கள், ஓடும் ரயில் சார்ந்த பணியாளர்கள் மற்றும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் அத்தியாவசிய ஊழியர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் தபால் வாக்கு உரிமை பெற்றுக் கொடுத்த நிலையில், இத்தேர்தலிலும் தொடரும் என, எதிர்பார்த்தோம்.
ஆனாலும், தமிழ்நாடு, கேரளாவில் மட்டும் ரயில்வே பணியாளர்கள் தபால் வாக்களிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் மறு பரிசீலனை செய்யவேண்டும். இந்த அறிக்கை தொடர்பாக தமிழக தேர்தல் ஆணைய அதிகாரிகள் மற்றும் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்” என்று அவர் கூறினார்.