மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அதாவது 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் நூறு நாள் வேலைக்கு இனி ரூ.319 ஊதியமாக வழங்கப்படும்.
கிராமப்புற வறுமை ஒழிப்பிற்காக மத்திய அரசு கடந்த 2005ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை இயற்றியது. இந்த சட்டத்தின் கீழ், 100 நாள் வேலைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஊரக வேலை உறுதித்திட்ட அட்டை வைத்திருப்பவர்கள் வேலை கோரினால் அந்த நபர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாள் வேலை அளிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை இந்த திட்டம் அளிக்கிறது.
100 நாட்கள் வேலை தர அரசு அதாவது, பஞ்சாயத்து அமைப்புகள் தவறினால், பாதிக்கப்பட்டவருக்கு முதல் 30 நாட்களுக்கு சம்பளத்தில் கால் பங்கும், மேலும் தவறினால் பாதி ஊதியத்தையும் அபராதமாக அரசு தர வேண்டும். தற்போது வரை இத்திட்டத்தின் கீழ் 25.25 கோடி பேர் பதிவு செய்துள்ளதாகவும், 14.35 கோடி பேர் தொடர்ச்சியாக பணிக்கு வருகிறார் எனவும் தகவல் தெரிவிக்கிறது.
இந்த நிலையில், தற்போது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அதாவது 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியத்தை மத்திய அரசு உயர்த்தி அறிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் தற்போது நாள் ஒன்றிற்கு 294 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டு வரும் நிலையில், இனி நாள் ஒன்றிற்கு 319 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும் என மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மாநில வாரியாகவும் இந்த ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலுக்கான, முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில் 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் இந்த அறிவிப்பு தேர்தலை ஒட்டி, அறிவிக்கப்பட்டுள்ளது என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.