“மோடி அலை என்ற ஒன்று இல்லை என்பது தேர்தல் முடிவுக்குப் பிறகு தெரியும்” – அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கருத்து

மோடி அலை என்ற ஒன்று இல்லை என்பது தேர்தல் முடிவுக்குப் பின் தெரியும் என கிருஷ்ணகிரியில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட குந்தாரப்பள்ளி கூட்ரோடு பகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷுக்கு ஆதரவாக அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி ஆதரவு திரட்டினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜெயலலிதா இடத்தில் மோடி உள்ளதாக டிடிவி தினகரன் பேசியுள்ளார். அவரை ‘எனது முகத்தில் முழிக்காதே’ எனத் துரத்தியவர் ஜெயலலிதா.

கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் ‘மோடியா, இந்த லேடியா’ எனக்கேட்டவர் ஜெயலலிதா. ஆனால், தற்போது சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்து, ஜெயலலிதா பெயரை வைத்து இன்று டிடிவி தினகரன் நாடகமாடுகிறார். பாஜக அரசு தேர்தல் ஆணையத்துக்குக் கொடுக்கும் அழுத்தம் காரணமாகவே, அவர்களது கூட்டணி கட்சிகளுக்கு கேட்கும் சின்னம் கிடைக்கிறது, எதிர்க்கட்சிகள் கேட்ட சின்னம் கிடைக்கவில்லை என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

பாஜகவினர் 350 முதல் 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்கிற மாயத் தோற்றத்தை உருவாக்கி, மக்களிடையே வாக்குகளை பெற முயற்சி செய்கின்றனர். அண்ணாமலை கோவையில் வெற்றி பெறுவது உறுதி, எத்தனை வாக்குகள் வித்தியாசம் என்பதை தான் பார்க்க வேண்டும் என்றெல்லாம் பேசி வருகின்றனர். அவர்கள் கற்பனை உலகத்தில மிதந்து வருகின்றனர். கோவையில் பாஜக எந்த இடத்தை பிடிக்கப்போகிறது என்பதை மக்கள் முடிவு செய்வர்.

தேர்தல் ஆணையம் தற்போது மத்திய அரசு அழுத்தத்தில், அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது. இதைத் தேர்தலில் அவர்கள் செய்ய முடியாது. அதையும் தாண்டி ஒருதலைபட்சமாக செயல்பட்டால் அந்த வாக்குச்சாவடியிலேயே பதில் கிடைக்கும். ஸ்டாலின் தன்னை காப்பாற்றிக் கொள்ள சிறுபான்மையினரை பற்றி பேசுவார்.

அவரைப் போலவே அவரது மகன் உதயநிதியும் சிறுபிள்ளைத்தனமாகப் பேசி, உளறி மக்களை ஏமாற்ற பார்க்கிறார். திமுகவினர் கடந்த காலங்களில் கோ பேக் மோடி என்றனர். தற்போது வெல்கம் மோடி என்கின்றனர்; தொடர்ந்து மக்களை ஏமாற்றுகின்றனர். மோடி அலை என்ற ஒன்று இல்லை என்பது தேர்தல் முடிவுக்கு பின் தெரியும் என்று கூறினார்.