மதுரை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு உணவு பாதுகாப்பு துறை சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் கள்ளழகர் சித்திரைத் திருவிழா தற்போது நடைபெற்று வருகின்றது. உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம், கள்ளழகர் எதிர்சேவை, கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுதல், மண்டுக முனிவருக்கு சாப விமோசனம், மற்றும் தசவதாரம் மற்றும் பூப்பல்லாக்கு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் எப்ரல் 12 முதல் 23 ஆம் தேதி வரை நடத்தப்படுகின்றது. அதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில் இந்தப் பகுதிகளில் தற்காலிக குளிர்பான கடைகள் மற்றும் நடமாடும் உணவகங்கள் மூலம் விற்பனை நடைபெறும். கள்ளழகர் எழுந்தருளும் மண்டகப்படிகள் மற்றும் மீனாட்சி அம்மன் கோவில் தேரோட்டத்தின் பொழுது மாசி வீதி முழுவதிலும் நீர் மோர் பந்தல், அன்னதானக் கூடங்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் பக்தர்களுக்கு உணவு மற்றும் நீர்மோர் வழங்கப்படும். இந்நிலையில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் பல்வேறு கட்டுப்பாடு மற்றும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் மாவட்டத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் மற்றும் கள்ளழகர் வைகை ஆற்றல் எழுந்தருளுதல் தொடர்பாக மண்டகப்படிகள்களில் அன்னதானம் வழங்குதல் மற்றும் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதம், உணவுகள், குளிர்பானங்கள், சர்பத் ஆகியவை சுத்தமாகவும், சுகாதாரமாகவும், பாதுகாப்பாகவும் வழங்க வேண்டும்.
மேலும் அதில் செயற்கை சாயங்கள் எதுவும் சேர்க்கக்கூடாது எனவும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பாலத்தின் பைகள், பிளாஸ்டிக் கப்புகள் ஆகியவற்றையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும் எனவும் அன்னதானம் வழங்கும் பொழுது சேரும் கழிவுகளை முறையாக சேகரித்து மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதனால் தற்காலிக குளிர்பானக் கடைகள் மற்றும் உணவகங்கள் தரமான குடிநீர், செயற்கை சாயங்கள் அற்ற உணவுகளை விற்பனை வேண்டும். மேலும் பிரசாதம் வழங்கும் நபர்கள் https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் சென்று இணையவழியில் 100 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பம் செய்து மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் அனுமதி அல்லது பதிவு சீட்டு சான்றிதழைப் பெற வேண்டும். உணவு பாதுகாப்புத் துறை சான்றிதழ் பெற்றால் மட்டுமே அன்னதானம் வழங்க முடியும். மேலும் உணவு மற்றும் உணவுப் பொருட்கள் தொடர்பாக புகார்களுக்கு தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்பு துறை வாட்ஸ் அப் எண் 9444042322 எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.