இந்திய நீதித்துறையின் கண்ணியத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு 500க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
நீதிமன்ற முடிவுகளில் செல்வாக்கு செலுத்தவும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் அரசியல் தூண்டுதல்களால் நீதித்துறையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவும் முயற்சி நடைபெறுவதாக கவலை தெரிவித்து, நாடு முழுவதுமிருந்து 500-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா உள்ளிட்டோர் அடங்கிய வழக்கறிஞர்கள் அனுப்பியுள்ள அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ’ஊழல் குற்றம் சாட்டப்பட்ட அரசியல் பிரமுகர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் இதுபோன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது தெளிவாகத் தெரிகிறது. நீதிமன்ற முடிவுகளை திசை திருப்புவதற்கும் நீதித்துறையை இழிவுபடுத்துவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சட்டத்தின் ஆட்சி இல்லாத நாடுகளுடன் நமது நீதிமன்றங்களை ஒப்பிடுவதும், நமது நீதித்துறையை நியாயமற்ற நடைமுறைகளால் குற்றம் சாட்டுவதுமான செயல்கள் நடைபெறுகின்றன. இவை வெறும் விமர்சனங்கள் அல்ல; அவை நமது நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை தகர்ப்பது, நமது சட்டங்களின் நியாயமான நடைமுறையை அச்சுறுத்தும் நேரடி தாக்குதல்கள்.
நீதிமன்றத்தின் முடிவு தங்களுக்கு உகந்ததாக இல்லையென்றால் உடனடியாக நீதிமன்றத்திற்குள்ளேயும், ஊடகங்கள் மூலமாகவும் நீதிமன்றங்களை விமர்சிக்கிறார்கள். இந்த போக்கு நமது சட்ட அமைப்பின் மீது ஒரு சாமானிய மனிதனுக்கு இருக்க வேண்டிய மரியாதைக்கு தீங்கு விளைவிக்கும். அமைதியாக இருப்பது அல்லது எதுவும் செய்யாதிருப்பது தீங்கு செய்ய விரும்புவோருக்கு அதிக சக்தியைக் கொடுக்கும். கண்ணியமான மௌனத்தைக் கடைப்பிடிப்பதற்கான நேரம் இதுவல்ல. ஏனெனில் இதுபோன்ற முயற்சிகள் சில ஆண்டுகளாக அடிக்கடி நடந்து வருகின்றன.’ என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.