குற்றவாளிகளை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருப்பதாக உத்தம் சிங் நகர் சீனியர் போலீஸ் சூப்பிரெண்டு மஞ்சுநாத் தெரிவித்தார்.
உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தம் சிங் நகர் மாவட்டம், ருத்ராபூர்-தனக்பூர் சாலையில் சீக்கியர்களின் கோவிலான நானக்மட்டா சாஹிப் குருத்வாரா அமைந்துள்ளது. இந்த கோவிலின் கரசேவை குழு தலைவரான பாபா தார்செம் சிங் இன்று காலையில், கோவில் வளாகத்தில் நாற்காலியில் அமர்ந்திருந்தார். அப்போது பைக்கில் வந்த இரண்டு நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.
இதில் நிலைகுலைந்து சரிந்த அவரை உடனடியாக கதிமாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகள் துப்பாக்கியுடன் குருத்வாரா வளாகத்தில் வந்த காட்சி அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோவை வைத்து குற்றவாளிகளை தேடி கண்டுபிடித்து கைது செய்யும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
குற்றவாளிகளை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருப்பதாக உத்தம் சிங் நகர் சீனியர் போலீஸ் சூப்பிரெண்டு மஞ்சுநாத் தெரிவித்தார். இந்த கொலை சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு அதிரடிப் படை மற்றும் உள்ளூர் காவல்துறையினரை கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி.) அமைக்கப்பட்டுள்ளதாக டி.ஜி.பி. அபினவ் குமார் தெரிவித்தார். “இந்த சம்பவத்தின் பின்னணியில் ஏதேனும் சதி இருந்தால், விசாரணையில் தெரியவந்துவிடும். தேவைப்பட்டால் மத்திய விசாரணை அமைப்புகளின் உதவியும் நாடப்படும். குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம்” என்றும் அவர் கூறினார்.