மத்திய மந்திரியும், நீலகிரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான எல்.முருகன் மேட்டுப்பாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது:- நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யும் கூட்டமாக இந்த செயல்வீரர்கள் கூட்டம் உள்ளது.
சேலத்தில் நடந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் தலைவர்களை அறிமுகப்படுத்தி, கூட்டணியை உறுதி செய்து சென்றார். தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த தேர்தல் பாராளுமன்றத்திற்கான தேர்தல். இந்த தேர்தல் பிரதமர் நரேந்திரமோடிக்கான தேர்தல். இந்த தேர்தல் மூலம் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி பிரதமர் ஆக போகிறார்களா?.
ஒரு சீட் கூட வெற்றி பெற முடியாத அதி.மு.க எப்படி பிரதமராக போகிறார்கள். 3 ஆண்டுகால தி.மு.க ஆட்சியின் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். தேர்தலின் போது தி.மு.க டாஸ்மாக் கடைகளை குறைப்போம். கல்வி கடன் ரத்து, மகளிர் சுயஉதவிக்குழு கடன், விவசாய கடன்களை ரத்து செய்வதாக தேர்தல் வாக்குறுதிகளை அளித்தனர்.
ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர் எதையுமே செய்யவில்லை. வழக்கம் போல சொல்வது எதையும் செய்யாத ஆட்சியாக இந்த தி.மு.க ஆட்சியானது செயல்பட்டு கொண்டிருக்கிறது. எனவே தி.மு.க.வை தூக்கி எறிய மக்கள் தயராகிவிட்டனர். பொய் பேசுவதும், கொள்ளையடிப்பதும், லஞ்சம் வாங்குவது, கட்டபஞ்சாயத்து பண்ணுவது, குடும்ப ஆட்சி இவை எல்லாம் தான் தி.மு.க.வின் சிறந்த கொள்கையாக உள்ளது.
கடந்த 10 ஆண்டு கால பா.ஜ.க ஆட்சியில் சாலைகள், விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளும் நாடு முழுவதும் அசுர வளர்ச்சியில் முன்னேறி கொண்டிருக்கிறது. அந்த வகையில் மேட்டுப்பாளையத்திற்கான ரெயில் வசதியையும் மேம்படுத்தி கொடுத்துள்ளோம். இனி அடுத்து அமையும் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியிலும் இந்த சேவைகள் தொடர்ந்து செய்யப்படும். நேர்மையாக மக்களுக்கான ஆட்சியை நடத்தி கொண்டிருப்பது பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க தான். பாராளுமன்றத்தில் செங்கோல் வைப்பது உள்பட பல்வேறு வகைகளில் தமிழர்களுக்கு பா.ஜனதா பெருமை சேர்த்து வருகிறது.
நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் இதுவரை பாராளுமன்ற உறுப்பினராக இருந்து இந்த தொகுதிக்கு என்ன திட்டத்தை வாங்கி தந்துள்ளார். ஒன்றுமில்லை. அவர் வரலாற்றில் யாரும் செய்ய முடியாத 2 ஜி ஊழலை செய்துள்ளார். மேலும் அவர் இந்துக்கள், பெண்கள் மற்றும் தலைவர்களை கொச்சைப்படுத்தி பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். வருகிற பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் மத்திய அரசு செய்துள்ள திட்டங்களை மக்களிடம் எடுத்து கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.