தாய் மேனகா காந்திக்கு போட்டியிட வாய்ப்பளித்து மகன் வருண் காந்தியை பாஜக கைவிட்டுள்ளது. இதனால், காங்கிரஸில் சேர அழைப்பு வந்தும் மவுனம் காக்கிறார் வருண் காந்தி. மேலும், பாஜகவின் நகர்வால் சுயேச்சையாகவும் போட்டியிட முடியாமல் வேறு கட்சியிலும் சேர முடியாமல் சிக்கலில் சிக்கியுள்ளார் வருண் காந்தி.
முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்திக்கு அவர் எம்.பியாக உள்ள உத்தரப்பிரதேசம் சுல்தான்பூரில் போட்டியிட பாஜக மீண்டும் வாய்ப்பளித்துள்ளது. இதே மாநிலத்தின் பிலிபித் தொகுதியில் பாஜக எம்பியாக அவரது மகன் வருண் காந்தி உள்ளார். வருணின் பெயர் பாஜகவின் ஐந்தாவது வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை. பிலிபித் தொகுதியில் அவருக்குப் பதிலாக உபி மாநில அமைச்சர் ஜிதின் பிரசாத் பெயரை பாஜக அறிவித்துள்ளது.
ராகுல் காந்திக்கு நெருக்கமாக இருந்த இந்த நிதின், சில மாதங்களுக்கு முன் பாஜகவில் இணைந்தவர். இதனால், தம் தாய்க்கும் வாய்ப்பு கிடைக்காது என எண்ணி சுயேச்சை அல்லது சமாஜ்வாதியில் போட்டியிடத் திட்டமிட்டு வந்தார் வருண் காந்தி. தனது உதவியாளர் மூலம் சுயேச்சைக்கான வேட்பு மனுக்களையும் வாங்கி வைத்திருந்தார். ஆனால், தற்போது தாய் மேனகாவுக்கு வாய்ப்பளித்ததன் மூலம் மகன் வருணின் தனித்து போட்டிக்கும் பாஜக தடையை உருவாக்கிவிட்டது.
பாஜகவை விட்டு வருண் வெளியேறினாலும் அதன் தாக்கம் அவரது தாய் மேனகா மீது ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இச்சூழலில் வருணின் அரசியலில் மேலும் பல திருப்பங்கள் நிகழ்ந்துள்ளன.
கடந்த வருடம் ராகுல் காந்தி, அவரது கொள்கைகள் வேறு எனக் கூறி தம்முடன் சேர விரும்பிய வருணை விலக்கி வைத்திருந்தார். ஆனால், தற்போது வருணுக்கு கட்சியில் சேர வெளிப்படையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மக்களவையின் எதிர்கட்சித் தலைவரான ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, “காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர் வருண் என்பதால் பாஜக போட்டியிட வாய்ப்பளிக்கவில்லை. அவர் காங்கிரஸில் சேர விரும்பினால் வருணை வரவேற்கத் தயாராக உள்ளோம். நாமும் வருண் நமது கட்சியில் சேர வேண்டும் என விரும்புகிறோம்.” எனத் தெரிவித்துள்ளார்.
சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்சிங் யாதவும் தம் கட்சியில் வருணை சேர்க்கத் தயாராகி வந்தார். மேனகா மட்டும் போட்டியிடும் நிலையில், வருண் பாஜகவை விட்டும் விலக முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். சுயேச்சையாகவோ அல்லது வேறு கட்சிகளில் இணைந்தும் கூட வருண் காந்தியால் போட்டியிட முடியாத நிலை. எனவே, அவர் இந்தத் தேர்தலில் எந்த வகையிலும் போட்டியிடாமல் அமைதியாகவே இருக்க முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.
இதனிடையே, உபியின் 80 மக்களவை தொகுதிகளில் ஓரிரு தொகுதி தவிர பெரும்பாலானவற்றில் பாஜக வேட்பாளர் அறிவிப்பு வெளியாகி விட்டது. முக்கியமாக சோனியா காந்தி தொகுதியான ராய்பரேலியில் பாஜக எவரையும் அறிவிக்கவில்லை. இங்கு தம் இரண்டாவது தொகுதியாக ராகுல் அல்லது அவரது சகோதரி பிரியங்கா வதேரா போட்டியிடுவார்கள் என பாஜக எதிர்பார்க்கிறது. எனவே காங்கிரஸ் வேட்பாளரை பொறுத்து ராயப்ரேலியில் பாஜக தன் அறிவிப்பை வெளியிடக் காத்திருக்கிறது.