மக்கள் விரோத போக்கை கையாண்ட திமுகவுக்கும், அதிமுகவுக்கும் எதிராக இருக்கும் மக்கள் தங்களுக்கு வாக்களிப்பார்கள் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் பிரச்சாரத்தை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் தொடங்க உள்ள நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தலுக்கான ஒலிநாடா மற்றும் 22 நாட்களுக்கான தேர்தல் பிரச்சார திட்டத்தையும் வெளியிடுகிறேன். தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பு தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளில் பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தேர்தல் அறிவித்த பின்னர் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வருவதாகவே கருதுகிறேன். மத்திய அரசின் திட்டங்களால் ஆதரவு அதிகரித்து வருகிறது. பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகமாக உள்ளது.
ஆம் ஆத்மி கட்சி செய்த ஊழலின் அடிப்படையிலேயே கைது நடைபெற்றது. இதற்காக இந்தியா கூட்டணி அமைப்புகள் போராட்டம் நடத்துவதை மக்கள் சகித்துக் கொள்ளவில்லை. தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை நாளை காலை முதல் தொடங்கவுள்ளேன். வரும் 30 ஆம் தேதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். ஏப்ரல் 15ஆம் தேதி தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிகளில் பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறேன். தமாகா போட்டியிடக் கூடிய தொகுதிகளில் எதிர்க்கட்சியில் பலமான வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தாலும் கூட அவர்களுக்கு எதிரான வாக்குகள் அதைவிட அதிகமாகவே உள்ளது.
தமிழ்நாடு ஆட்சியாளர்கள் மீது ஒரு வெறுப்பு மக்களிடத்திலே உள்ளது. அதை வரும் 19-ஆம் தேதி தேர்தலின் போது மக்கள் வெளிக்காட்டுவார்கள். தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி முதல் கூட்டணியாக அதிக வாக்குகள் வெல்லக்கூடிய கூட்டணியாக நிலை மாறி உள்ளது. திமுகவுக்கும் அதிமுகவுக்கும் தான் போட்டி என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. 100% அதை ஒத்துக் கொள்கிறேன். அதேபோல், மக்கள் வீரோத போக்கை கையாண்ட திமுகவுக்கும் அதிமுகவுக்கும் எதிராக இருக்கும் மக்கள் தங்களுக்கு வாக்களிப்பார்கள்” என தெரிவித்தார்.