கர்நாடகா முன்னாள் அமைச்சரும், சுரங்க தொழிலதிபருமான ஜனார்த்தன ரெட்டி மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார்.
கல்யாண ராஜ்ய பிரகதி பக்-ஷா கட்சித் தலைவரும் கங்கவாடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஜனார்த்தன ரெட்டி இன்று பாஜகவில் இணைந்தார். மக்களவைத் தேர்தல் நெருங்கி உள்ள சூழலில், மாநில பாஜக தலைவர் விஜயேந்திரா, மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான எடியூரப்பா ஆகியோர் முன்னிலையில் ஜனார்த்தன ரெட்டி பாஜகவில் இணைந்துள்ளார். மேலும், தனது கட்சியையும் அவர் பாஜகவில் இணைத்துள்ளார்.
ஜனார்த்தன ரெட்டியின் மனைவி அருணா லக்ஷ்மி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் சிலரும் பாஜகவில் இணைந்துள்ளனர். சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்த ஜெனார்த்தன ரெட்டி, பாஜகவில் தான் இணைய விரும்புவது குறித்து தெரிவித்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில், இன்று அவர் முறைப்படி கட்சியில் மீண்டும் இணைந்துள்ளார்.
ஜனார்த்தன ரெட்டி மீண்டும் பாஜகவில் இணைந்திருப்பது கட்சிக்கு வலிமை சேர்க்கும் என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, “ஜனார்த்தன ரெட்டியும் அவரது மனைவியும் பாஜகவில் இணைந்துள்ளனர். அவர்கள் எடுத்த நல்ல முடிவு இது. அவர்கள் பாஜகவில் இணைந்துள்ளதால் கட்சி மேலும் வலுவடையும். 28 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும்” எனத் தெரிவித்தார்.
பாஜகவில் இணைந்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜனார்த்தன ரெட்டி, “நாட்டின் நலன் கருதி நான் பாஜகவில் இணைந்திருக்கிறேன். நான் எனது வீட்டுக்கு மீண்டும் திரும்பி இருக்கிறேன். நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வர வேண்டும் என ஒட்டுமொத்த நாடும் விரும்புகிறது. எனவே, நானும் அதில் இணைந்துள்ளேன். எனக்கு எந்த எதிர்பார்ப்பும் கிடையாது” எனத் தெரிவித்துள்ளார்.