ஹோலியை ஒட்டி புதுச்சேரி ஜிப்மர் புற நோயாளிகள் சிகிச்சை பிரிவுக்கு விடுமுறை : வெளியூர் நோயாளிகள் தவிப்பு

ஹோலியை ஒட்டி புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு இன்று விடுமுறை விடப்பட்டதை அறியாமல் சிகிச்சைக்காக வெளியூரிலிருந்து ஜிப்மர் வந்த நோயாளிகள் தவித்தனர்.

புதுச்சேரி ஜிப்மருக்கு சிகிச்சைக்காக புதுச்சேரி மட்டுமில்லாமல் தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை என பல மாவட்டங்களில் இருந்து நோயாளிகள் சிகிச்சைக்காக வருவார்கள். அதிலும் திங்கள்கிழமையன்று அதிகளவு நோயாளிகள் வருவார்கள். இந்நிலையில் பல மாவட்டங்களில் இருந்து திங்கள்கிழமையான இன்று ஏராளமான நோயாளிகள் புதுச்சேரி ஜிப்மருக்கு சிகிச்சைக்கு வந்தனர்.

ஆனால் அவர்களை அனுமதிக்கவில்லை. வாயிலில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு வெளிப்புற நோயாளிகள் பிரிவுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது தெரிவிக்கப்பட்டிருந்தது. வெளிப்புற சிகிச்சைப் பிரிவும் மூடப்பட்டிருந்தது. வெளி மாவட்டங்களில் இருந்து சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் கடும் அவதியடைந்தனர்.

ஜிப்மர் தரப்பில் கூறுகையில், “மத்திய அரசு விடுமுறை என்பதால் வெளிப்புற சிகிச்சைப் பிரிவுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அவசர சிகிச்சைப் பிரிவுகள் வழக்கம் போல் இயங்குகிறது” என்றனர். இது பற்றி நோயாளிகள் பலரும் கூறுகையில், “ஹோலி பண்டிகை எங்களுக்கு தெரியாது. அதற்கு இங்கு ஏன் விடுமுறை விட்டார்கள் என தெரியவில்லை. சிகிச்சைக்காக பல கி.மீ. பயணித்து வந்து வலியுடன் திரும்புகிறோம். வட மாநில பண்டிகைக்கு எல்லாம் புற சிகிச்சைப் பிரிவுக்கு விடுமுறை விடுகிறார்கள். இதனால் இங்குள்ளோர் தான் தவிக்கிறோம்” என்றனர்.