ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது.
மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு கட்டத்தில் 15 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்திருந்தது. டெவால்டு பிரேவிஸ் 37 பந்தில் 46 ரன்களும், திலக் வர்மா 10 பந்தில் 15 ரன்கள் எடுத்தும் களத்தில் இருந்தனர். மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு கடைசி 5 ஓவரில், அதாவது கடைசி 30 பந்தில் 43 ரன்கள் தேவைப்பட்டது. இது எளிதான இலக்குதான். மேலும் பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் குஜராத் பந்து வீச்சாளர்கள் துல்லியமாக பந்து வீச இயலாது என கருதப்பட்டது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 11 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் போட்டியில் வெற்றி பெற்றிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 16-வது ஓவரில் மோகித் சர்மா 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து பிரேவிஸ்-ஐ அவுட்டாக்கினார். அடுத்து டிம் டேவிட் களம் இறங்கினார். அந்த நேரத்தில் 25 பந்தில் 40 ரன்கள் தேவைப்பட்டது. அதிரடியாக களம் இறங்கி ஹர்திக் பாண்ட்யா சிக்ஸ், பவுண்டரி பறக்க விடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், டிம் டேவிட் களம் இறக்கப்பட்டார். 17-வது ஓவரை ரஷித் கான் வீசினார். இந்த ஓவரில் ரஷித் கான் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இந்த ஓவரில் அவர் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்ததன் காரணமாகவே மும்பை அணிக்கு நெருக்கடி அதிகமானது. அதன்பின் 3 ஓவரில் மும்பைக்கு அணிக்கு 36 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரில் மோகித் சர்மா 9 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். 27 ரன் தேவை என்ற நிலையில் 19-வது ஓவரில் ஜான்சன் 8 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.
19 ரன்கள் தேவை என்ற நிலையில் கடைசி ஓவரில் உமேஷ் யாதவ் 12 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். மும்பை இந்தியன்ஸ் அணி 6 ரன்னில் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தது. இந்த நிலையில் மும்பை அணி தோல்விக்கு ஹர்திக் பாண்ட்யா எடுத்த முடிவுதான் காரணம் என இர்பான் பதவி விமர்சனம் செய்துள்ளார்.
டிம் டேவிட்டிற்குப் பதிலாக ஹர்திக் பாண்ட்யா களம் இறங்கியிருக்க வேண்டும். ஆனால், ரஷித் கான் பந்தை எதிர்கொள்ள ஹர்திக் பாண்ட்யா விரும்பவில்லை. இதனால் டிம் டேவிட்டை களம் இறக்கினார். இது மும்பை அணியின் தோல்விக்கு வழி வகுத்தது. இது மோசமான கேப்டன்சி என விமர்சித்துள்ளார். 18-வது ஓவரின் கடைசி பந்தில் டிம் டேவிட் (10 பந்தில் 11 ரன்) ஆட்டமிழந்ததும் ஹர்திக் பாண்ட்யா களம் இறங்கினார். இவர் கடைசி ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடித்து ஆட்டமிழந்தார்.