மதுரை அருகே 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வெண் கொற்றக் குடையுடன் கூடிய நர்த்தன விநாயகர் விநாயகர் சிற்பம் கண்டுபிடிப்பு

மதுரை : மார். 26, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த வெண் கொற்றக் குடையுடன் கூடிய நர்த்தன விநாயகர் சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டம் சோளங்குருணி கிராமத்தில் ஒரு பழமையான விநாயகர் சிற்பம் இருப்பதாக நாகரத்தினம் அங்காளம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வரலாற்றுத் துறை மாணவர்களான தர்மராஜா, காளிமுத்து, முரளிதரன், கருப்பசாமி ஆகியோர் தகவல் தெரிவித்தனர். அதன்படி அக்கல்லூரியின் வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியரும் பாண்டிய நாடு பண்பாட்டு மையத் தொல்லியல் கள ஆய்வாளருமான தாமரைக் கண்ணன் மற்றும் ஆய்வாளர் ஸ்ரீதர் ஆகியோர் அங்கு சென்று ஆய்வு செய்த போது அந்த சிற்பமானது ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட விநாயகர் சிற்பம் என்பது தெரிந்தது.

இது குறித்து அவர்கள் கூறியதாவது: “நர்த்தன விநாயகர் சிற்பமானது 5 அடி உயரமும் ஒன்றரை அடி அகலமும் கொண்ட பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இதில் விநாயகர் நான்கு கரங்களில் வலது மேற்கரத்தில் மழுவும், இடது மேற்கரத்தில் பாசம் என்கிற ஆயுதத்தையும், முன் கரங்களில் மோதகத்தை பிடித்த படியும், தலைப் பகுதி கிரீடம் மகுடம் அணிந்தும், துதிக்கை வலப் புறமாக வளைந்து வலம் புரி விநாயகராக நின்ற கோலத்தில் நர்த்தன விநாயகராக நேர்த்தியாக வடிக்கப்பட்டுள்ளது. நர்த்தன விநாயகர் என்பது ஆடலில் சிறந்தவர் என்பதாகும். காலடியில் இரண்டு உருவங்கள் நின்ற கோலத்தில் செதுக்கப்பட்டுள்ளது.

தலைக்கு மேல் வெற்றி மற்றும் பாதுகாப்பின் அடையாளமான வெண்கொற்றக் குடையும், இரு புறமும் சாமரமும் இடம் பெற்றுள்ளது. மேலும் இச்சிற்பத்தை பார்க்கும் போது சிவன் கோயில்களில் காணப்படும் தேவகோட்டச் சிற்பமாக கருதலாம். சிற்ப அமைப்பை வைத்து பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதலாம் என்றும், இப்பகுதியில் ஒரு சிவன் கோவில் இருந்து கால ஓட்டத்தில் அழிந்திருக்க வேண்டும் அதன் எச்சங்களான சிற்பங்கள் இப்பகுதியில் தொடர்ந்து கிடைத்து வருவது கூடுதல் சிறப்பாகும்.” என்று கூறினர்.