கடந்த தேர்தலின்போது ராகுல் காந்திக்கு அமேதி தொகுதியில் என்ன நேர்ந்ததோ அது இம்முறை வயநாடு தொகுதியிலும் நிகழும் என்று அத்தொகுதியின் பாஜக வேட்பாளர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலின்போது உத்தரப் பிரதேசத்தின் அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்டார். அதில், அமேதி தொகுதியில் பாஜகவின் ஸ்மிருதி இரானியிடம் அவர் தோல்வி அடைந்தார். அதேநேரத்தில், வயநாட்டில் சிபிஐ கட்சியின் பி.பி.சுனீர் என்பவரை 4.31 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
இம்முறை, சிபிஐ கட்சியின் சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் ஆனி ராஜா வயநாட்டில் போட்டியிடுகிறார். ராகுல் காந்தியும் வயநாட்டில் போட்டியிடுகிறார். இவர்கள் இருவரும் இந்தியா கூட்டணியில் இருக்கிறார்கள். இருவரையும் எதிர்த்து பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் சுரேந்திரன் நிறுத்தப்பட்டுள்ளார். நேற்று வெளியிடப்பட்ட பாஜகவின் வேட்பாளர் பட்டியலில் இது உறுதியானது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய சுரேந்திரன், “வளர்ச்சி இல்லாத தொகுதியாக வயநாடு இருக்கிறது. இந்த தொகுதிக்கு ராகுல் காந்தி எதையும் செய்யவில்லை. கடந்த தேர்தலின்போது அமேதி தொகுதியில் அவருக்கு என்ன நேர்ந்ததோ அது இம்முறை வயநாட்டிலும் நேரும்.
கட்சியின் மத்தியத் தலைமை என் மீது நம்பிக்கை வைத்து இந்தப் பொறுப்பை வழங்கி இருக்கிறது. இந்தியா கூட்டணியின் இரு தலைவர்கள் ஏன் ஒரே தொகுதியில் போட்டியிடுகிறார்கள் என்ற கேள்வியை வயநாடு தொகுதி மக்கள் நிச்சயம் கேட்பார்கள்” என தெரிவித்தார்.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலின்போது பாஜகவின் கூட்டணி கட்சியான பாரத் தர்ம ஜன சேனா கட்சியின் தலைவர் துஷார் வெல்லபள்ளி என்பவர், வயநாடு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிட்டார். அப்போது அவர் வெறும் 78,816 வாக்குகளை மட்டுமே பெற்றார். பதிவான மொத்த வாக்குகளில் இது 7.25% மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.