“ஓர் இஸ்லாமியர் உருவாக்கிய ‘பாரத் மாதா கி ஜே’ முழக்கத்தையும், ‘ஜெய்ஹிந்த்’ முழக்கத்தையும் சங்பரிவார் கைவிடுமா?” என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கேள்வி எழுப்பி உள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நடத்தப்பட்ட 4-வது கண்டன பொதுக்கூட்டம் மலப்புரத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய பினராயி விஜயன், “நாட்டின் வரலாறு மற்றும் சுதந்திர இயக்கத்தில் முஸ்லிம் ஆட்சியாளர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றியுள்ளனர்.
இங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சில சங்பரிவார் தலைவர்கள், எதிரில் அமர்ந்திருந்தவர்களிடம், ‘பாரத் மாதா கி ஜே’ கோஷம் எழுப்பும்படி கூறினர். ஆனால், அந்த முழக்கத்தை உருவாக்கியவர் யார்? அவர் பெயர் அஜிமுல்லா கான் என்பது சங்க பரிவாரங்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை.
இந்த கோஷத்தை உருவாக்கியவர் ஒரு முஸ்லிம் என்பதால் அவர்கள் அதை பயன்படுத்துவதை நிறுத்துவார்களா என்பது எனக்கு தெரியாது. அதேபோல், வெளியுறவுத் துறை தூதராக இருந்த அபித் ஹசன் என்ற முஸ்லிம்தான் ‘ஜெய் ஹிந்த்’ கோஷத்தை முதலில் எழுப்பினார்.
50-க்கும் மேற்பட்ட உபநிஷதங்களை சமஸ்கிருதத்தில் இருந்து பாரசீக மொழியில் மொழி பெயர்த்தவர் முகலாயப் பேரரசர் ஷாஜகானின் மகன் தாரா ஷிகோ. இந்திய படைப்புகள் உலகின் பல பகுதிகளுக்கும் செல்ல உதவியாக இருந்தவர் அவர்.
முஸ்லிம்களை இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு நாடு கடத்த வேண்டும் என்று கூறும் சங்பரிவார் தலைவர்கள், இத்தகைய வரலாறுகளை அறிய வேண்டும். நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடியதில் முஸ்லிம்களுக்கும் பெரும் பங்குண்டு” என்று பினராயி விஜயன் பேசினார்.