மக்களவைத் தேர்தலில், கர்நாடகா, கேரளா, தெலங்கானா, மகாராஷ்டிரா மாநிலங்களில் விசிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்தார் விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி.
மக்களவைத் தேர்தலில் தமிழகம், கேரளா உட்பட 6 மாநிலங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக, சிதம்புரம் மற்றும் விழுப்புரம் ஆகிய இரு தொகுதிகளில் தனிச் சின்னத்தில் போட்டியிட உள்ளது. இதில், சிதம்பரத்தில் திருமாவளவனும், விழுப்புரத்தில் ரவிக்குமாரும் மீண்டும் போட்டியிடுகின்றனர். மக்களவைத் தேர்தலில் விசிக பானை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக திருமாவளவன் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “தமிழகம், கேரளா உட்பட 6 மாநிலங்களில் விசிக போட்டியிடும். தெலங்கானாவில் 10 தொகுதிகள், கர்நாடகா 6, கேரளா 5, மகாராஷ்டிராவில் ஒரு தொகுதி ஆகியவற்றில் விசிக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. ஆந்திர மாநிலத்தில் தொகுதிப் பங்கீடு குறித்து காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஒய்.எஸ்.ஆர்.சார்மிளாவுடன் நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். மேலும், தனித்தனியாக தேர்தல் அறிக்கைகள் அந்தந்த மாநிலங்களுக்கு வெளியிடப்படும்.
ஒரு கட்சி வளர்வதற்கு அதன் கருத்தியல் முதன்மையானது என்று நான் நம்புகிறேன். ஆள் பலம் பண பலம் என்பது மேலோட்டமாக தெரிகிற விவகாரங்கள். எந்த ஒரு கட்சி கொள்கை கோட்பாட்டில் உறுதியாக இருக்கிறதோ, தொலைநோக்கு பார்வையுடன் இருக்கிறதோ அக்கட்சியை மக்கள் அடையாளம் கண்டால் கட்சிக்கு மிகப்பெரிய வலிமை உருவாகும்.
பாஜக கூட்டணியில் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் தங்களுக்கு எதிரான வழக்குகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக சேருகிறார்கள் அல்லது ஆளும் கட்சியின் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே சேர்கிறார்கள்” என்றார்.