திமுக கூட்டணியில் விருதுநகர் தொகுதியை மீண்டும் தக்கவைத்துக்கொண்டு காங்கிரஸ் கட்சி சார்பில் களம் இறங்கியுள்ளார் மாணிக்கம் தாகூர்.
காங்கிரஸ் கட்சி வரலாற்றில் அழிக்க முடியாத சுவடுகளைக் கொண்டது விருதுநகர் தொகுதி. இருபெரும் பிரதமர்களை நாட்டுக்கு தந்தவர் காமராஜர். அதனால்தான் அவர் கிங் மேக்கர் என அழைக்கப்பட்டார். நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி பாரம்பரியம் மிக்க விருதுநகர் தொகுதியை இம்முறையும் விட்டுக்கொடுக்காமல் கேட்டுப்பெற்றுள்ளது.
கடந்த முறை சிவகங்கை தொகுதியில் பா.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்திற்கு சீட் கொடுக்கக் கூடாது, வாரிசு அரிசியல் இருக்கக் கூடாது என முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் குரல் கொடுத்ததால், அவரது அண்ணன் மகனான மாணிக்கம் தாகூருக்கு விருதுநகர் தொகுதியில் வாய்ப்புக் கொடுக்கக் கூடாது என பா.சிதரம்பரம் தரப்பினரும் பிரச்சினையை கிளப்பினர்.
இது கட்சியினரிடையே சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, விருதுநகர் தொகுதியில் மாணிக்கம் தாகூரை வேட்பாளராக அறிவிக்கக் கூடாது என விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் கணேசன், இளைஞர் காங்கிரஸ் தொகுதி தலைவர் காளிதாஸ், சிவகாசி முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஞானசேகரன் உள்ளிட்டோர் கட்சியின் மேலிடத்திற்கு தொடர்ந்து புகார் கடிதங்கள் அனுப்பினர். இருப்பினும் காங்கிரஸ் வேட்பாளராக களம் இறங்கிய மாணிக்கம் தாகூர் வெற்றிபெற்றார்.
ஆனால், இம்முறை காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், திருநாவுக்கரசர் தனக்கு விருதுநகர் தொகுதி ஒதுக்க வேண்டும் என கட்சி மேலிடத்தில் கேட்டுள்ளார். இதனால் தமிழகத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு எந்த சர்ச்சைகளுக்கும் ஆளாகாமல் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக மாணிக்கம்தாகூர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
49 வயதாகும் மாணிக்கம்தாகூர் பி.ஏ., எல்.எல்.பி. படித்தவர். முழுநேர அரசில்வாதியான இவர், 1994 முதல் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வருபவர். தற்போது ஆந்திர மாநில மேலிட பொறுப்பாளராகவும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். திருமங்கலத்தில் வசித்து வரும் மாணிக்கம் தாகூருக்கு திருமணமாகி சுபாஷினி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
கடந்த 2009ல் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மாணிக்கம் தாகூர், 2014ல் காங்கிரஸ் கட்சி தனித்து நின்று போட்டியிட்டபோது, அதிமுக வேட்பாளர் ராதாகிருஷ்ணனிடம் தோல்வி அடைந்தார். மீண்டும் 2019ல் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மாணிக்கம்தாகூர், தற்போது 4வது முறையாக மீண்டும் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக விருதுநகர் மக்களவைத் தொகுதியில் களமிறங்கியுள்ளார். இதனால் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.