தமிழ்நாட்டில் திமுக, அதிமுக இடையே தான் போட்டி எனவும், பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது என தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி வேட்பாளராக மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவர் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். சென்னை திரும்பி இருந்த அவர், மீண்டும் தூத்துக்குடி செல்வதற்காக இன்று காலை சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தூத்துக்குடி தொகுதியில் திமுக நிச்சயமாக வெற்றிபெறும். அதே போல் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து 12 தொகுதிகளுக்கு பிரசாரத்திற்கு செல்ல உள்ளேன். தமிழகத்தில் போட்டி என்றால் திமுக, அதிமுக இடையே தான். பாஜகவை மக்கள் கருத்தில் கொள்ள மாட்டார்கள். பாஜகவினர் சவால் விட்டாலும் ஓட்டு எண்ணும் போது அதனைப் பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.
மேலும், ”பாஜக ஆளும் மாநிலங்களின் நிலை எப்படி இருக்கிறது என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாடு முன்னேறிய மாநிலங்களின் முக்கியமானது. கல்வி, தொழில், போன்ற அனைத்து துறைகளிலும் முன்னேறி இருப்பதற்கு திராவிட இயக்கத்தின் கருத்துக்களை உள்வாங்கிய ஆட்சி நடப்பதால் தான். தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்க முடியாது. அப்படி ஒரு வாய்ப்பு வந்தால், தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது. முதலில் நாட்டை காப்பாற்ற வேண்டும்” என்றார்.