கோவை கோட்டை மேட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த 2022-ம் ஆண்டு 23-ந் தேதி கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபின் (வயது 28) பலியானார்.
தீபாவளிக்கு முந்தைய தினத்தில் மக்கள் கூட்டத்தில் காரை வெடிக்க செய்து பெரும் சேதத்தை ஏற்படுத்த ஜமேஷாமுபினும், அவரது கூட்டாளிகளும் திட்டமிட்டிருந்த நிலையில் அந்த சதியில் சிக்கி ஜமேஷா முபினே பலியானார். இந்த வழக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். ஜமேஷா முபினுடன் தொடர்புடைய 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் வீடுகளில் சோதனையும் நடத்தப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் பெங்களூரில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் இதுவரை குற்றவாளிகள் பிடிபடாமல் உள்ளனர். பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் கார் குண்டுவெடிப்பில் கைதானவர்களுக்கு தொடர்பு இருக்குமா என்ற கோணத்தில் என்.ஐ.ஏ. தற்போது விசாரணையில் இறங்கி உள்ளது. இதுதொடர்பாக முகமது உசேன், ஜமேசா உமரி உள்ளிட்ட 3 பேரை காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள். அவர்கள் இன்று சென்னையில் இருந்து கோவை அழைத்து வரப்பட்டனர்.
என்.ஐ.ஏ. அதிகாரி விக்னேஷ் தலைமையிலான அதிகாரிகள் அவர்கள் 3 பேரையும் கோவைக்கு அழைத்து வந்தனர். கோவை குனியமுத்தூரில் உள்ள அரபிக்கல்லூரி மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். மேலும் ஆசாத் நகர் பகுதிக்கும் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து ஆயுதப்படை மைதானத்தில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கும் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.