“வேடந்தாங்கல் பறவை போல அன்புமணி ராமதாஸ் அடிக்கடி கூட்டணியை மாற்றிக் கொண்டிருக்கிறார்” – இபிஎஸ் விமர்சனம்

“வேடந்தாங்கல் பறவை போல அன்புமணி ராமதாஸ் அடிக்கடி கூட்டணியை மாற்றிக் கொண்டிருக்கிறார்” என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “வேடந்தாங்கல் பறவை போல அன்புமணி ராமதாஸ் அடிக்கடி கூட்டணியை மாற்றிக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு தேர்தலில் கூட்டணி மாறிக் கொண்டிருப்பவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அதுமட்டுமில்லை, பாஜகவுக்கு பூஜ்ஜியம் மதிப்பெண் கொடுப்பதாகச் சொன்னவர் பெரியவர் ராமதாஸ். இப்போது அதே கட்சியின் கூட்டணியில் இணைந்து வெற்றி பெறப்போவதாகச் சொல்கிறார். ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு கூட்டணியில் இணைகிற கட்சிதான் பாமக.

கூட்டணியை நம்பி எல்லாம் நாங்கள் கட்சி நடத்தவில்லை. கூட்டணி இல்லை என்றால் சொந்த பலத்தில் நிற்போம். இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக கொண்டுவந்தது அதிமுக. விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடப்பது இது முதல்முறையல்ல. இதற்கு காரணம் திமுகதான்.

அதிமுகவில் முன்னாள் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் பலர் போட்டியிடுகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்த இந்த மூன்று ஆண்டுகளில் கடுமையான ஊழல் நடக்கிறது. எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் விற்பனை நடக்கிறது. சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதி அதிமுகவால் அடையாளம் காட்டப்பட்டவர். அதிமுகவுக்கு துரோகம் செய்துவிட்டு சென்றார். அவருக்கு தண்டனை கிடைக்கும்” என்று இபிஎஸ் குற்றம்சாட்டினார்.