முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான பிடியை இறுக்கும் அமலாக்கத்துறை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் சி.விஜய பாஸ்கர் மீது  புதுக்கோட்டை நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் தங்களையும் இணைத்துக்கொள்ள அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்திருக்கிறது. 

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்  வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அதன் மீதான விசாரணை புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்க முன் வராததால் அந்தக் கட்சி மீது பாஜக தலைமை கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அதன் வெளிப்பாடாக, 6 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த குட்கா வழக்கில்  விசாரணையை தொடங்க தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கரின் வீட்டில் கடந்த வியாழக்கிழமை அமலாக்கத்துறையினர் திடீர்  சோதனை நடத்தினர். 

அதேசமயத்தில் விஜயபாஸ்கர் தொடர்புடைய சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் விஜயபாஸ்கர் மீதான தங்கள் பிடியை அமலாக்கத்துறை மேலும் இறுக்கத் தொடங்கியுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விஜயபாஸ்கர் மீதான ஊழல் வழக்கில் தங்களையும் இணைக்கக்கோரி அமலாக்கத்துறை சார்பில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இப்படி எல்லாம் வில்லங்கம் கிளம்பிவிடக் கூடாது என்பதால் தான் தனது அரசியல் நடவடிக்கைகளை கொஞ்சம் அடக்கியே வாசித்தார் விஜயபாஸ்கர். குறிப்பாக, மத்திய பாஜக அரசு கோபப்படும் படியாக எந்தக் கருத்தையும் தெளிக்காமல் இருந்தார்.

ஆனாலும் விடுவதாக இல்லை பாஜக அரசு. தற்போது அமலாக்கத்துறை புதுக்கோட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் மனுவில், விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக 35.89 கோடி சொத்து சேர்த்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தங்களையும் இணைக்க வேண்டும் என்றும், லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களை தங்களுக்கு  வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது. இதையடுத்து விஜயபாஸ்கர் மீது அமலாக்க துறையின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் மேலும் இறுகும் எனக் கூறப்படுகிறது.