இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான பூட்டானுக்கு பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
பூட்டானில் உள்ள பாரோ சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று காலை பிரதமர் மோடி சென்றடைந்தார். பாரோ சர்வதேச விமான நிலையத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியை பூட்டான் பிரதமர் செரிங் டோபே நேரில் சென்று வரவேற்றார்.
இந்தியா மற்றும் பூட்டானின் தேசிய கொடிகளை ஏந்தி நின்றபடி அந்நாட்டு மக்கள் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளித்தனர். இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி எழுதிய ‘கர்பா’ பாடலுக்கு பாரம்பரிய உடை அணிந்த நடனக் கலைஞர்கள் நடனமாடினர். அந்த நடனத்தை ரசித்துப் பார்த்த பிரதமர் மோடி நடனக் கலைஞர்களை வெகுவாக பாராட்டி புகழ்ந்தார்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பூட்டானின் உயரிய சிவிலியன் விருதான ‘ஆர்டர் ஆப் தி ட்ருக் கியால்போ’ விருதை பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக் வழங்கினார். இந்த விருதைப் பெற்ற முதல் வெளிநாட்டு அரசாங்கத் தலைவர் என்ற பெருமையைப் பிரதமர் மோடி பெற்றார். இந்நிலையில் இன்று திம்புவில் இந்திய அரசின் உதவியுடன் கட்டப்பட்ட அதிநவீன தாய்-சேய் நல மருத்துவமனையான ஜியால்ட்சுன் ஜெட்சன் பெமாவை பிரதமர் மோடி திறந்துவைத்துள்ளார்.