“தமிழகத்தில் அரசியல் மாற்றம் கோவையில் இருந்து தொடங்கும்” – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

“தமிழகத்தில் அரசியல் மாற்றம் கோவையில் இருந்து தொடங்கும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

பாஜக தமிழக தலைவரும், கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளருமான அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: “இது தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் இடையே நடக்கும் தேர்தல். கோவை மக்கள் அடுத்த 40 நாட்கள் பார்ப்பார்கள். தமிழகத்தில் எங்கும் இல்லாத அளவுக்கு இங்கு பணமழை பொழியும். இலவசங்கள் அள்ளிக் கொடுப்பார்கள். முதல்வரே இங்கு வந்து 40 நாட்கள் பிரச்சாரம் செய்தாலும், பாஜக சரித்திர வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்.

கோவை மக்கள் மாற்றம் வேண்டும் என தெளிவாக உள்ளனர். தமிழகத்தில் அரசியல் மாற்றம் தேவை. அந்த மாற்றம் கோவையில் இருந்து தொடங்கும். பிரதமர் 3-வது முறையாக வரும் போது கோவையை சர்வதேச வரைபடத்தில் பதிக்கப் போகிறோம். இந்த சரித்திர தேர்தலில் 39 இடங்களையும், தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று, சரித்திர சாதனை ஜூன் 4-ம் தேதியில் இருந்து தொடங்கும்.

டெல்லி அரசியலில் இருக்க எனக்கு விருப்பம் இல்லை. தமிழக அரசியலில் தான் தொடர்ந்து இருப்பேன். பிரதமர் மோடி போட்டியிட உத்தரவிட்டுள்ளதால் நான் போட்டியிடுகிறேன். தமிழகத்தில் எல்லா இடத்துக்கும் வளர்ச்சி வர வேண்டும். 2026 பாஜக ஆட்சியமைக்கும் போது, 2 ஆண்டுகளில் தமிழகத்துக்கு வந்துள்ள மாற்றங்களை நாங்கள் காட்ட வேண்டும். அப்போது தான் 2026-ல் தமிழகத்தில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்.

ஒவ்வொரு தேர்தலுக்கும் திமுக தேர்தல் அறிக்கை தருவதும், பின்னர் அதை நிறைவேற்றாமல் இருப்பதும், அடுத்த தேர்தலுக்கு அதை மாற்றித் தருவதையும் வழக்கமாக செய்கின்றனர். பாஜக 2019-ம் ஆண்டு அறிவித்த 295 வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட்டு 2024 தேர்தலுக்கு வந்துள்ளோம்.

போட்டியிடும் வேட்பாளர்கள் மீது எனக்கு மரியாதை உள்ளது. என் சண்டை, அறிவாலயத்தோடு, கோபாலபுரத்தோடு மட்டும் தான். தமிழகத்தின் ஆதிக்க சக்திகள், வளர்ச்சியை யார் தடுத்திருக்கிறார்களோ அவர்களோடு தான் என் சண்டை.

வாக்குக்கு ஒரு ரூபாய் கூட நாங்கள் தர மாட்டோம். மக்களை நம்பி, கோவையில் மாற்றம் ஆரம்பமாக வேண்டும் என நம்பி வந்துள்ளோம். பிரதமரின் கோவை வாகனப் பேரணியின் போது, பள்ளிகளுக்கு தமிழக அரசு விடுமுறை விட்டுள்ளது. மாணவர்களை பாஜக அழைக்கவில்லை. அவர்கள் தங்களது பிரதமரை பார்க்க வந்தனர். பிரதமர் பெட்டிக்கடை அரசியல்வாதி கிடையாது. விஸ்வகுரு” என்றார்.

முன்னதாக, வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர், முதல் முறையாக கோவை வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.