2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் சிபிஐ மேல்முறையீட்டை ஏற்றது டெல்லி உயர் நீதிமன்றம்

2ஜி அலைக்கற்றை முறைகேடு புகாரில் கனிமொழி, ஆ.ராசா ஆகியோருக்கு எதிராக சிபிஐ தொடர்ந்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.

கனிமொழி, ஆ.ராசா விடுவிக்கப்பட்ட சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்திருந்தது. சிபிஐ மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி தினேஷ்குமார் அறிவித்துள்ளார். மே மாதத்தில் இருந்து விசாரணை தொடங்கும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டெல்லி உயர் நீதிமன்றம் விசாரணை நீதிமன்றம் கிடையாது என்பதால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நேரில் ஆஜராகவோ, சாட்சியங்கள் விசாரணையோ நடக்காது. ஏற்கனவே இந்த வழக்கின் சாட்சியங்கள் விசாரணை நீதிமன்றமான சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு விட்டன.

எனவே, சிபிஐ நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியா, தவறா என்பது குறித்த வாதங்கள் மட்டுமே மேல்முறையீட்டு மனுவில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடக்கும். புதிதாக சாட்சியங்களை பதிவு செய்வதற்கோ, குறுக்கு விசாரணை செய்வதற்கோ வாய்ப்பு இல்லை. எனவே டெல்லி உயர் நீதிமன்றத்தின் மிக விரைவாக முடிவதற்கு வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் முறைகேடு நடந்ததாகவும், மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் மத்திய தணிக்கை துறை (சிஏஜி) சுட்டிக் காட்டியது.

இந்த ஊழல் வழக்கை விசாரித்த டெல்லி சிறப்பு நீதிமன்றம், கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. வழக்கில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி மற்றும் 15 பேரை விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து கடந்த 2018-ம் ஆண்டில் சிபிஐ தர்ப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்தான் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உள்ளதாக டெல்லி உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல் கட்டத்திலேயே தேர்தல் நடைபெறவுள்ளது. தூத்துக்குடி வேட்பாளராக கனிமொழியும், நீலகிரி வேட்பாளராக ஆ.ராசாவும் திமுக சார்பில் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கு எதிரான மனு விசாரிக்கப்பட உள்ளது.