மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு : கடலூரில் இயக்குநர் தங்கர் பச்சான் போட்டி

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 அன்று நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 10 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அவற்றில் அக்கட்சி சார்பில் போட்டியிடும் 9 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல் பட்டியலை பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ளார். காஞ்சிபுரம் (தனி) மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது.

இதன்படி,திண்டுக்கல் – கவிஞர் ம.திலகபாமா, அரக்கோணம் – வழக்கறிஞர் கே.பாலு, ஆரணி – முனைவர் அ.கணேஷ் குமார், கடலூர் – தங்கர் பச்சான், மயிலாடுதுறை – ம.க.ஸ்டாலின், கள்ளக்குறிச்சி – இரா. தேவதாஸ் உடையார், தருமபுரி – அரசாங்கம், சேலம் – ந. அண்ணாதுரை, விழுப்புரம் – முரளி சங்கர் ஆகிய 9 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல் பட்டியல் வெளியிட்டப்பட்டுள்ளது.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் போட்டியிட்டார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ். திமுக வேட்பாளர் செந்தில்குமாருக்கும் அவருக்கு கடும்போட்டி நிலவிய நிலையில், 70 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் செந்தில்குமார் தருமபுரியில் வென்றார். 5,04,235 வாக்குகள் பெற்று அன்புமணி தோல்வியை சந்தித்தார்.

எனினும், அதிமுக உடனான கூட்டணி ஒப்பந்தத்தின்படி ராஜ்யசபா உறுப்பினராக பதவியேற்று நாடாளுமன்றம் சென்றார். இம்முறை மக்களவைத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் மீண்டும் அன்புமணி களமிறங்கலாம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரின் பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை. தற்போதைய தருமபுரி எம்பியான செந்தில்குமாருக்கும் திமுக வாய்ப்பளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அழகி, பள்ளிக்கூடம் உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற இயக்குநர் தங்கர் பச்சான். இவர் பாமக சார்பில் கடலூர் தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.