ஜாமின் பெற விசாரணை நீதிமன்றத்தை அணுகவும் – மதுபான ஊழல் முறைகேடு வழக்கில் கவிதாவிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஜாமின் பெற விசாரணை நீதிமன்றத்தை நாடுமாறு, பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் எம்எல்சி கே.கவிதாவுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

டெல்லி மதுபான ஊழல் முறைகேடு வழக்கில் கடந்த 15-ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவ் மகளும், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் எம்எல்சியுமான கே.கவிதா, ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எம்எம் சுந்தரேஷ், பேலா எம் திரிவேதி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. கவிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதிகள், ஜாமின் பெற விசாரணை நீதிமன்றத்தை நாடுமாறு அறிவுறுத்தினர். அதுதான் வழக்கமான நடைமுறை என்றும் அதை உச்சநீதிமன்றம் மீற முடியாது என்றும் தெரிவித்தனர்.

அதேநேரத்தில், பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இது தொடர்பாக பதில் அளிக்க அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

சரணடைபவர்களின் வாக்குமூலத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத் துறை கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கபில் சிபல் தனது வாதத்தில் தெரிவித்தார். தற்போதைய சூழலில் இது உகந்ததது அல்ல என நீதிபதிகள் தெரிவித்தனர்.

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால், முன்னாள் அமைச்சர் மணிஷ் சிசோதியா ஆகியோருடன் இணைந்து கவிதா சதிச் செயலில் ஈடுபட்டுள்ளார். மதுபான கொள்கைக்காக ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ. 100 கோடி பணம் கொடுத்துள்ளார் என அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது. எனினும், தன் மீதான குற்றச்சாட்டு தவறானது என கவிதா தெரிவித்துள்ளார்.