இரண்டு நாள் பயணமாக பூடானுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.
கடந்த மார்ச் 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை 5 நாள் பயணமாக பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே இந்தியா வந்தார். அப்போது டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசிய டோப்கே, பிரதமரை தங்கள் நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
மேலும் அந்த சந்திப்பின்போது, பூடானின் 13வது ஐந்தாண்டு திட்டத்துக்கு இந்தியா ஆதரவை அதிகரிக்கும் என்றும், பொருளாதார வளர்ச்சித் திட்டத்துக்கான கோரிக்கையை பரிசீலிப்பது, உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கும், இணைப்பை உருவாக்குவதற்கும் மேம்பாட்டு உதவி வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
12வது ஐந்தாண்டு திட்டத்துக்காக பூட்டானுக்கு ரூ.5 ஆயிரம் கோடி மதிப்புள்ள உதவிகளை இந்தியா வழங்கியிருந்தது.
இந்நிலையில் பூடான் பிரதமர் அழைப்பின் பேரில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் பயணமாக இன்று அந்நாட்டுக்குப் புறப்பட்டு சென்றார். அங்குள்ள பாரோ சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி சென்றடைந்ததும் அந்நாட்டு பிரதமர் ஷெரிங் டோப்கே வரவேற்றார். பிரதமர் மோடியின் பூடான் பயணமானது, இந்திய அரசின் ‘அண்டை நாடுகள் முதலில்’ என்ற கொள்கைக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒரு பகுதியாகும்.
முன்னதாக நேற்றே பிரதமர் மோடி பூடான் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இமயமலை பிரதேச நாடான அங்கு நிலவிய மோசமான வானிலை காரணமாக பயணம் இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பூடானுக்கு புறப்படுவதற்கு முன்னதாக பிரதமர் மோடி கூறுகையில், இந்தியா – பூட்டான் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்தார். பிரதமர் மோடி நாளை மாலைக்குப் பின்னர் தாயகம் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.