“காங்கிரஸ் கட்சி இத்தனை ஆண்டு காலமாக கொள்ளையடித்த பணத்தை, தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தலாம்” என்று பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா பகடி தொனியில் கருத்து தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர், காங்கிரஸ் கட்சியை நிதி ரீதியாக முடக்க பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டினர். இதற்கு பதில் அளிக்கும் விதமாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, “காங்கிரஸ் கட்சி மக்களால் முற்றிலுமாக நிராகரிக்கப்படப் போகிறது. வரலாற்றுத் தோல்வி ஏற்பட இருப்பதைக் கண்டு அச்சமடைந்துள்ள அக்கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள், நாட்டின் ஜனநாயகம் மற்றும் அரசு அமைப்புகளுக்கு எதிராக குற்றம் சாட்டி இருக்கின்றனர். காங்கிரஸ் கட்சிக்கு நிதிச் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக பொறுத்தமற்ற குற்றத்தை அவர்கள் சாட்டி இருக்கிறார்கள். உண்மையில், காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல் நிதி சார்ந்தது அல்ல; தார்மிகம் மற்றும் அறிவு சார்ந்தது.
காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் தவறுகளை சரிசெய்வதற்கு பதிலாக, அவர்களின் பிரச்சினைகளுக்கு அதிகாரிகளை குற்றம் சாட்டுகிறார்கள். வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயமாக இருந்தாலும், டெல்லி உயர் நீதிமன்றமாக இருந்தாலும் அவை, விதிகளுக்கு இணங்குமாறும், செலுத்த வேண்டிய வரிகளை செலுத்துமாறும் தெரிவித்துள்ளன. ஆனால், காங்கிரஸ் கட்சி அதனை செய்யவில்லை.
நாட்டின் ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொரு மாநிலத்திலும், வரலாற்றின் ஒவ்வொரு தருணத்திலும் கொள்ளையடித்த ஒரு கட்சி, தனக்கு நிதி சிக்கல் ஏற்பட்டிருப்பதாகக் கூறுவது நகைச்சுவையானது. ஜீப் ஊழல் தொடங்கி போஃபர்ஸ் ஹெலிகாப்டர் ஊழல் வரை பல்வேறு ஊழல்களைச் செய்த அக்கட்சி தனது அனைத்து ஊழல்களிலிருந்தும் திரட்டப்பட்ட பணத்தை தங்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தலாம்.
இந்தியாவில் ஜனநாயகம் இருக்கிறது என்பது பொய் என காங்கிரஸ் கட்சியின் பகுதிநேர தலைவர்கள் கூறி இருக்கிறார்கள். 1975 முதல் 1977 வரை (அவசரநிலை காலம்) சில மாதங்கள் மட்டுமே இந்தியா ஜனநாயக நாடாக இல்லை என்பதையும், அந்த நேரத்தில் இந்தியாவின் பிரதமராக இருந்தவர் இந்திரா காந்தி என்பதையும் நான் அவர்களுக்கு தாழ்மையுடன் நினைவூட்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.