சட்டரீதியாக அனைத்து வழக்குகளையும்,  அமலாக்கத் துறையினர் சோதனைகளையும் எதிர்கொள்வோம்” – இபிஎஸ் பேட்டி

“அதிமுகவுக்கு நெருக்கடி என்ற பேச்சுக்கே இடமில்லை. சட்டரீதியாக அனைத்து வழக்குகளையும் சந்திப்போம். அனைத்து ரெய்டுகளையும் சட்டரீதியாக எதிர்கொள்வோம்” என்று விஜயபாஸ்கர் வீட்டில் நடந்து வரும் ரெய்டு குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் வெளியீடு இன்று நடந்தது. வேட்பாளர்கள் விவரங்களை அறிவித்த பின் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “அதிமுகவுக்கு நெருக்கடி என்ற பேச்சுக்கே இடமில்லை. சட்டரீதியாக அனைத்து வழக்குகளையும் சந்திப்போம். அனைத்து ரெய்டுகளையும் சட்டரீதியாக எதிர்கொள்வோம். பெண்கள் விருப்பப்பட்டு கேட்பவர்களுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினரை பொறுத்தவரை எஸ்டிபிஐ கட்சிக்கு சீட் கொடுத்துள்ளோம். மதச்சார்பற்ற கட்சி இது.

வெற்றிவாய்ப்பை பொறுத்து தான் வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளோம். ஜூனியர், சீனியர் எல்லாம் கிடையாது. தலைமைக்கு விசுவாசமாக, உழைப்பு செலுத்துபவருக்கே அதிமுகவில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. புதுமுக வேட்பாளர்களுக்கு சீட் கொடுப்பதில் என்ன தவறு.

கூட்டணி என்பது சூழ்நிலைகளுக்கு தகுந்தவாறு அமைக்கப்பட்டுள்ளது. கூட்டணி இருந்து தான் ஒரு கட்சி வெற்றிபெறும் என்றால் அந்த கட்சி நிலையாக இருக்க முடியாது. அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்படுவார்கள்.

பெட்ரோல், டீசல் விலையை திமுக குறைக்க முடியுமா.. அல்லது இந்தியா கூட்டணியா ஆட்சிக்கு வரப்போகிறது குறைப்பதற்கு. 2021 தேர்தல் அறிக்கையிலும் இதேபோல் குறைப்பதாகச் சொன்னார்கள். அதை முதலில் குறைக்கட்டும்.

அதிமுக பலம் வாய்ந்த கட்சி. அதிமுகவின் வலிமையைப் புரிந்துகொள்ள வேண்டும். அதிமுகவை பலவீனமாக எடைபோட வேண்டாம். திமுக எம்பி.,க்கள் செய்த சாதனைகள் என்ன. ஒன்றும் செய்யவில்லை. தமிழகத்துக்கு கிடைக்க கூடிய வெளிமாநில நீரை கூட திமுக பெறவில்லை.” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.