மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுகவின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இன்று வெளியிட்டார்.
மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில், எஸ்.டி.பி.ஐ., தேமுதிக, புதிய தமிழகம் கட்சி ஆகியவை இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. தேமுதிகவிற்கு ஐந்து இடங்களும், எஸ்டிபிஐ மற்றும் புதிய தமிழகம் கட்சிகளுக்கு தலா ஒரு இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. நேற்றைய தினம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு முழுவதும் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் முதல் கட்டப் பட்டியலை வெளியிட்டிருந்தார்.
16 பேரின் பெயர்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றிருந்தது. கூட்டணி பேச்சு வார்த்தைகள் நிறைவடைந்து விட்டதை அடுத்து மீதமுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அவர் இந்த பட்டியலை வெளியிட்டார். அப்போது விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ராணி போட்டியிடுவார் எனவும் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் பின்வருமாறு ; கோவை – சிங்கை ராமச்சந்திரன், திருச்சி – கருப்பையா, பெரம்பலூர் – சந்திரமோகன், மயிலாடுதுறை – பாபு, ஸ்ரீபெரும்புதூர் – பிரேம் குமார், தருமபுரி – அசோகன், திருப்பூர் – அருணாசலம், நீலகிரி – லோகேஷ் தமிழ்ச்செல்வன், வேலூர் – பசுபதி, திருவண்ணாமலை – கலியபெருமாள், கள்ளக்குறிச்சி – குமரகுரு, சிவகங்கை – சேகர் தாஸ், நெல்லை – சிம்லா முத்துச்சோழன், புதுச்சேரி – தமிழ்வேந்தன், தூத்துக்குடி – சிவசாமி வேலுமணி, கன்னியாகுமரி – பசிலியா நசரேத், விளவங்கோடு இடைத்தேர்தல் – ராணி. 33 தொகுதிகளில் அ.தி.மு.க நேரடியாக போட்டியிடுகிறது.