மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் அமமுகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு

பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அண்ணாமலை மற்றும் டிடிவி தினகரன் கையெழுத்திட்டனர். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், “நாங்கள் கேட்ட தொகுதிகளை கொடுத்துள்ளனர். எந்தெந்த தொகுதிகள் என்பதை பாஜக தலைமை அறிவிக்கும். நான் போட்டியிடுவது தொடர்பாக இன்னும் முடிவு செய்யப்படவில்லை. பாஜக தலைமை தொகுதிகளை அறிவித்த பின் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.

குக்கர் சின்னம் கேட்டு விண்ணப்பித்துள்ளோம். திராவிட இயக்கங்களை ஒழிப்போம் என்று பாஜக தலைவர்கள் சொல்வது திமுக, அதிமுகவை தான். ஜெயலலிதா திராவிட பாரம்பர்யத்தின் பரிணாம வளர்ச்சி. இங்கு பிறந்தவர்கள் எல்லாம் திராவிடர்கள்தான். அதில் மாற்றுக்கருத்து இல்லை. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் புதிய சாதனை படைப்பார்கள். நான் தேனியில் போட்டியிட வேண்டும் என்று நீண்ட நாளாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த முறை அங்கு போட்டியிடுவது தொடர்பாக வாய்ப்பு இருந்தால் பார்ப்போம்” என்று தெரிவித்தார்.