தமிழ்நாட்டில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கு 5 தவணைகளாக வழங்கப்பட்டு வரும் ரூ.14,000 நிதியுதவி, வரும் ஏப்.1ம் தேதி முதல் 3 தவணைகளாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் மூலம் தமிழக அரசு நிதியுதவி அளித்து வருகிறது. கருத்தரித்த 12 வாரத்துக்குள், அருகில் உள்ள ஆரம்பசுகாதார நிலையத்தில் பெயரை பதிவு செய்து, அதற்கான எண் பெற்றவுடன் பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.2 ஆயிரம் செலுத்தப்படும். பின்னர் 4 மாதத்துக்கு பிறகு 2வது தவணையாக ரூ.2 ஆயிரம் மற்றும் சத்துமாவு, ஆவின் நெய், கதர் துண்டு, இரும்புச்சத்து டானிக் உள்ளிட்டவை அடங்கிய ரூ.2 ஆயிரம் மதிப்பிலான பெட்டகம் இருமுறை அளிக்கப்பட்டன.
அரசு மருத்துவமனையில் பிரசவம் முடிந்தவுடன் 3வது தவணையாக ரூ.4 ஆயிரம், குழந்தைக்கு தடுப்பூசி போடும் காலத்தில் 4-வது தவணையாக ரூ.4 ஆயிரம், குழந்தைக்கு ஒன்பதாவது மாதம் முடிந்தவுடன் ஐந்தாவது தவணையாக ரூ. 2 ஆயிரம் என ரூ.14 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ. 4 ஆயிரம் மதிப்புள்ள பெட்டகம் என ரூ.18 ஆயிரம் மதிப்பிலான உதவிகள் வழங்கப்படுகின்றன. இதுவரை 5 தவணைகளாக வழங்கப்பட்டு வந்த ரூ.14,000 நிதியுதவி இனி 3 தவணைகளில் வழங்கப்படவுள்ளது. கர்ப்ப காலத்தின் 4வது மாதத்தில் ரூ.6 ஆயிரமும், குழந்தை பிறந்த 4வது மாதத்தில் ரூ.6 ஆயிரமும், குழந்தை பிறந்த 9வது மாதத்தில் ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட இருக்கிறது.
அதேபோல், பேறு காலத்தில் மூன்றாவது மற்றும் ஆறாவது மாதங்களில் இரு முறை ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட உள்ளன. இந்த புதிய நடைமுறை வரும் ஏப்.1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.