தேர்தல் வந்தாலே பட்டி தொட்டி முதல் மாநகர பகுதிவரை விழா கோலம்தான். அன்பான வாக்காள பெருமக்களே உங்கள் பொன்னான வாக்குகளை என்றவாறு வலம் வரும் வாகனங்கள், போடுங்கம்மா ஓட்டு என்ற குரல்கள், உங்கள் தொகுதிக்கு தேவையான அனைத்தையும் செய்து தருவேன் என்ற வாக்குறுதிகள் என கலகலக்க வைக்கும் காட்சிகளை காணலாம்.
பாராளுமன்ற தேர்தலில் சற்று புதுமையாக புதுக்கோட்டை மாவட்ட மக்களை 4 தொகுதி வேட்பாளர்கள் சந்திக்கிறார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை சட்டப்பேரவை தொகுதிகள் திருச்சி பாராளுமன்ற தொகுதியிலும், ஆலங்குடி, திருமயம் தொகுதிகள் சிவகங்கை பாராளுமன்ற தொகுதியிலும், அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதி ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியிலும், விராலிமலை சட்டப் பேரவை தொகுதி கரூர் பாராளுமன்ற தொகுதியிலும் வருகிறது.
தேர்தல் பிரசாரம், தலைவர்கள் வருகை, வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு என அனைத்திலும் 4 பாராளுமன்ற தொகுதி கட்சியினர் இந்த மாவட்டத்துக்கு வந்து செல்லவேண்டிய நிலை உள்ளது. 4 தொகுதிகளின் அனைத்து வேட்பாளர்களும் புதுக்கோட்டை மாவட்டத்தை கடக்காமல் செல்ல இயலாது என்ற நிலை உள்ளது.
இதனால் புதுக்கோட்டை மாவட்டம் தேர்தல் திருவிழாவை உற்சாகமாக கொண்டாடுகிறது. என்றாலும் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை செலுத்தும் பொருட்டு மறக்காமல் ஓட்டு போட்டு ஜனநாயக கடமை ஆற்றவேண்டும் என்கிறார்கள் சமூகநல ஆர்வலர்கள்.