போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்கள் நீட்டித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த பிப்.24ம் தேதி டெல்லியில் உள்ள குடோனில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் சோதனை நடத்தி, ரூ.2,000 கோடி மதிப்புள்ள 50 கிலோ போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். மேலும் தமிழகத்தை சேர்ந்த மூவரையும் கைது செய்தனர். இந்த போதைப் பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளரான ஜாபர் சாதிக்கை போலீஸார் தேடி வந்தனர். இதையடுத்து அவர், திமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக அனைத்து விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. அவரது வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த மார்ச் 9ம் தேதி ஜாபர் சாதிக்கை போலீஸார் கைது செய்தனர்.
இதையடுத்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஜாபர் சாதிக்கை போலீஸார் ஆஜர்படுத்தினர். போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக ஜாபர் சாதிக்கை, காவலில் எடுத்து விசாரிக்க போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் மனுதாக்கல் செய்தனர். இதையடுத்து 3 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஜாபர் சாதிக் நேற்று சென்னை அழைத்து வந்து என்சிபி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் போலீஸ் காவல் முடிந்த நிலையில், டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஜாபர் சாதிக் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து ஜாபர் சாதிக்கிற்கு மேலும் 14 நாள்கள் நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.