நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த வழக்கில், நடிகை விஜயலட்சுமி ஆஜராகாததால், ஏப்ரல் 2-ம் தேதி ஆஜராக மேலும் ஒரு அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக, நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக கடந்த 2011-ம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், ‘கடந்த 2011-ம் ஆண்டு அளித்த புகாரை 2012-ம் ஆண்டிலேயே திரும்பப் பெற்துக் கொள்வதாக நடிகை விஜயலட்சுமி கடிதம் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில், காவல்துறை விசாரணை மேற்கொண்டு வழக்கை முடித்து வைத்தனர். இந்நிலையில், தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது. அதை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது,வழக்கை விசாரித்த நீதிபதி, புகார்தாரரான நடிகை விஜயலட்சுமி, மார்ச் 19-ம் தேதி பிற்பகல் 2:15மணிக்கு ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், ஏற்கெனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் பெங்களூருவில் வசித்து வரும் நடிகை விஜயலட்சுமிக்கு நீதிமன்றத்தில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜராக விரும்பாவிட்டால் இந்த மனுவை ஏன் நிலுவையில் வைத்திருக்க வேண்டும்?என கேள்வி எழுப்பிய நீதிபதி, விஜயலட்சுமி ஆஜராக மேலும் ஒரு அவகாசம் வழங்குவதாகக் கூறி, விசாரணையை ஏப்ரல் 2-ம் தேதிக்கு தள்ளிவைத்தார். அன்றைய தினம் நேரில் ஆஜராக முடியாவிட்டால் காணொலி காட்சி மூலமாக ஆஜராகலாம் எனவும் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.