ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மூத்த தலைவரும், ஹேமந்த் சோரனின் அண்ணியுமான சீதா சோரன் பாஜகவில் இணைந்துள்ளார்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் மறைந்த தலைவர் துர்கா சோரனின் மனைவியான சீதா சோரன், அந்தக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தார். இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை விட்டு விலகி, இன்று அவர் பாஜகவில் இணைந்துள்ளார். மேலும், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் அவர் ராஜினாமா செய்துள்ளார்.
பாஜகவில் இணைந்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீதா சோரன், “கட்சிக்காக நான் 14 ஆண்டுகள் பாடுபட்டிருக்கிறேன். ஆனால், அதற்கான மரியாதை எனக்கு இல்லை. அதன் காரணமாகவே, இந்த பெரிய முடிவுக்கு நான் தள்ளப்பட்டேன். எனது கணவர் துர்கா சோரனின் மரியாதையை காக்கவே, மரியாதை இல்லாத இடத்தில் இருந்து நான் வெளியேறி இருக்கிறேன்.
பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்வதைப் பார்க்கிறோம். வெளிநாடுகளில் இந்தியாவுக்கு மிகப் பெரிய புகழ் கிடைத்துள்ளது. இவற்றை கருத்தில் கொண்டும், ஜெ.பி. நட்டா, அமித் ஷா ஆகியோர் மீது நம்பிக்கை வைத்தும் நான் பாஜகவில் இணைந்துள்ளேன். ஜார்க்கண்ட்டை காப்பாற்றுவதில் அவர்கள் எனக்கு ஆதரவு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சீதா சோரன் பாஜகவில் இணைந்திருப்பது துரதிருஷ்டவசமானது என ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் மூத்த தலைவர் மனோஜ் பாண்டே, “அவரது முடிவு துரதிருஷ்டவசமானது. அவரை கட்சியின் முக்கிய நபராக நாங்கள் கருதினோம். அவர் மீண்டும் திரும்பி வருவார் என நம்புகிறோம்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவில் அவருக்கு கிடைத்த மரியாதை வேறு எங்கும் கிடைக்காது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு எதிரானவர்களின் வலையில் அவர் வீழ்ந்துள்ளார். இதன்மூலம் அவர் தனக்குத்தானே தீங்கு ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.