பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் விதிகள் அனைத்தையும் அப்பட்டமாக மீறுகின்ற வகையில், தனது பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், தங்கள் கட்சியின் வேட்பாளர்களுடன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மத்திய அரசின் தவறான கொள்கையினால் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் இயங்க முடியாத அளவுக்கு இருக்கின்றன. மூடப்பட வேண்டிய நிர்ப்பந்தமான நிலைக்கு அவை உள்ளாகி இருக்கின்றன. மின்சார கட்டணம் குறித்து பரிசீலித்து நல்ல முடிவு எடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்த பிறகு நல்ல முடிவை அறிவிக்கிறோம் என அவர் கூறினார்.
தேர்தலில் என்னென்ன நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இது ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என இல்லாமல் அனைத்து கட்சியினருக்கும் பொதுவானது. இவற்றை யாரும் மீறக் கூடாது; அனைவரும் பின்பற்றி நடக்க வேண்டும். ஆனால் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி, இந்த தேர்தல் விதிகள் அனைத்தையும் அப்பட்டமாக மீறுகின்ற வகையில், தனது பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
குறிப்பாக கோவையில் ரோடு ஷோ என்ற பெயரால் பெரிய ஒரு ஆர்ப்பாட்டத்தோடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாஜக மற்றும் மோடி எதிர்பார்த்தபடி பொதுமக்கள் யாரும் அங்கு வரவில்லை. அதற்கு மாறாக பள்ளி குழந்தைகளை கொண்டு வந்து தெருவில் நிறுத்தி, அவர்கள் வரவேற்பு கொடுப்பதை போல செய்து இருக்கிறார்கள். இது அப்பட்டமான விதிமீறல் ஆகும். இது குறித்து நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிப்போம். மோடி மீதும், பாஜக மீதும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று எங்கள் கட்சியின் சார்பில் வற்புறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.
இந்தத் தேர்தலை ஜனநாயக ரீதியில் எதிர்கொள்ள முடியுமா என்ற அச்சம் எழுகிறது. மத்தியில் இருக்கக்கூடிய ஆட்சி என்பது ஜனநாயகத்திற்கு புறம்பாக சர்வாதிகாரமாக பாசிச தன்மையோடு செயல்படுகிற காரணத்தினால் தேர்தல் ஆணையமும் மற்றவர்களும் அவர்களுக்கு அடிபணிந்து விடுவார்களோ என்ற அச்சம் நிலவுகிறது. அவற்றை எல்லாம் எதிர்கொண்டு நாங்கள் தேர்தலை சந்திப்போம். தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 இடங்களிலும் திமுக தலைமையிலான எங்களுடைய கூட்டணி மகத்தான வெற்றி பெறும்” எனத் தெரிவித்துள்ளார்.