மக்களவை தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படை வாகனங்களில் ‘சோலார்’ சுழலும் கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு

மக்களவை தேர்தலையொட்டி மதுரை, விருதுநகர், தேனி ஆகிய 3 தொகுதிகளுக்கு உட்பட்ட எல்லை பகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபடுகின்றனர். மக்களவை தொகுதிக்கான ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 3 பறக்கும் படையினரும், நிலையான கண்காணிப்பு மற்றும் வீடியோ கண்காணிப்பு குழுவினர் சோதனையில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்திலேயே முதன்முறையாக ஒவ்வொரு பறக்கும் படையினரின் வாகனங்களிலும் சோலார் மூலம் இயங்கும் வகையில், ஜிபிஎஸ் (GPS) கருவியுடன் 360 டிகிரி கோணத்தில் பதிவாகும் விதமான சுழலும் சிசிடிவி கேமிராக்களும் பொறுத்தி வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சிசிடிவி கேமிராக்களின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு 24 மணி் நேரமும் கண்காணிக்கும்படி ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு வாகனத்திலும் கையடக்க ‘ டேப்ளட் ’ நவீன போன் மூலமாக வீடியோக்கள் முழுவதுமாக பதிந்து சேமிக்கப்படுகிறது. ரூ.49 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணம் இன்றி பணம் எடுத்து வந்தால் பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வாகனங்களில் அரசியல் கட்சி சார்ந்த கொடிகள் கட்டப்பட்டிருந்தால் அகற்றுதல் உள்ளிட்ட தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றி பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்துகின்றனர்.

அதிகாரிகள் கூறுகையில், ”வாகனத் தணிக்கையின் போது, வீடியோ பதிவுக்குழு இருந்தாலும், வாகனங்களில் சிசிடிவிக்கள் பொருத்தி இருப்பதன் மூலம் எல்லா கோணத்திலும் கண்காணிக்க முடியும். இம்முறை இந்த புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.