நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் மதிமுக சார்பில் திருச்சியில், கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ போட்டியிடுவார் என்று ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இந்தத் தேர்தலில் பம்பரம் சின்னம் தங்களுக்கு கிடைத்தால் மகிழ்ச்சி என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “மதிமுகவின் ஆட்சிமன்றக் குழுவின் கூட்டம் இன்று கட்சியின் அவைத் தலைவர் அர்ஜுன ராஜா தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர், பொருளாலர் செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ, துணைப் பொதுச் செயலாளர்கள் மல்லை சத்யா, ஏ.கே.மணி, ஆடுதுறை முருகன், தி.மு.ராஜேந்திரன், டாக்டர் ரொஹையா மற்றும் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில், திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் மதிமுக திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறது. இத்தேர்தலில் மதிமுக சார்பில் போட்டியிடுகிற வேட்பாளர் தேர்வு குறித்து கட்சியின் ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. திருச்சி மக்களவைத் தொகுதியில் மதிமுக சார்பில் கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோவை வேட்பாளராக போட்டியிடச் செய்வதென்று ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
தேர்தல் ஆணையத்தின் தவறான கணக்கீட்டால், மதிமுக பம்பரம் சின்னத்தை இழந்துள்ளது. எங்களது வாக்கு சதவீதமான 5.99 என்பதை 6 சதவீதமாக அவர்கள் கணக்கிட்டிருக்க வேண்டும். எனவே, தவறான கணக்கீட்டால், அங்கீகாரத்தையும், சின்னத்தையும் இழந்தோம். எனவே, டெல்லி சென்று தேர்தல் ஆணையத்திடம், ஆதாரங்களுடன் தேர்தல் ஆணையத்தை அணுகி இருக்கிறோம். வரவு செலவுக் கணக்கும், வருமான வரிக் கணக்கு என அனைத்தையும் நூறு சதவீதம் சரியாக வைத்திருக்கிறோம்.
பம்பரம் சின்னம் கிடைத்தால் மகிழ்ச்சி. அப்படி கிடைக்காதபட்சத்தில், பொதுச் சின்னங்கள் என்று தேர்தல் ஆணையத்தால், வரையறுக்கப்பட்டுள்ள பட்டியல்களில் இருந்து வேட்புமனுவில் குறித்து கொடுக்க வேண்டும். ஒரு புதிய சின்னத்தை எப்படி மக்களிடத்தில் கொண்டுபோய் சேர்க்க முடியும். உதயசூரியன் எல்லாம் பழக்கமான சின்னம். எனவே, அதில் போட்டியிட வேண்டும் என்று கூறியதால்தான், உதயசூரியன் சின்னத்தில் கடந்தமுறை போட்டியிட்டோம்.
ஆனால், இப்படி போட்டியிடுவது சட்ட ரீதியாக தவறாக வந்துவிடும். யாராவது இது தவறான வெற்றி எனக்கூறி வழக்குத் தொடர்ந்தால், அதற்கு பதில் சொல்ல வேண்டிய நிலை வந்துவிடும். எனவே, கட்சியின் தனித்தன்மையைப் பாதுகாக்க வேண்டும் என்பதால், அதற்கேற்ற வகையில் ஒரு சின்னத்தை தேர்ந்தெடுத்து அதை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்போம்” என்று வைகோ கூறினார்.