போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக ஜாபர் சாதிக்கிடம் சென்னையில் விசாரணை

ரூ.2000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் திமுக நிர்வாகி ஜாபர் சாதிக்கிடம் சென்னையில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த மார்ச் 9-ம் தேதி கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கை 7 நாட்கள் காவலில் எடுத்து மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரித்தனர். இதுவரை டெல்லியில் நடந்துவந்த விசாரணையில் சென்னை மற்றும் திருச்சியில் உள்ள ஜாபர் சாதிக்கின் குடோன்களில் இருந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு போதைப் பொருட்கள் கடத்தப்பட்டது தெரிய வந்தது. ஜாபர் சாதிக்கின் நண்பரான சதா, இந்த குடோன்களில் இருந்து போதைப்பொருளை மசாலா உள்ளிட்ட பொருட்களுடன் கலந்து அனுப்பி கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, சதா 13-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து ஜாபர் சாதிக்கை கூடுதலாக மூன்று நாட்கள் காவலில் எடுத்தனர். இந்த நிலையில் இன்று அவரை என்சிபி அதிகாரிகள் சென்னை அழைத்து வந்துள்ளனர். அதிகாலை 5.30 மணிக்கு சென்னை வந்தனர். தற்போது சென்னையில் உள்ள சென்னை மண்டல மத்திய போதைப்பொருள் தடுப்பு அலுவலகத்தில் வைத்து ஜாபர் சாதிக்கிடம் விசாரித்து வருகின்றனர்.

போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் யாருக்கு எல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து விசாரிக்கவும், குடோன் மூலம் நடந்த கடத்தல் தொடர்பாகவும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையின் ஒருகட்டமாக சென்னை பட்டினப்பாக்கத்தில் இருக்கக்கூடிய வீட்டுக்கு ஜாபர் சாதிக்கை அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது.