கரும்பு விவசாயி சின்ன வழக்கை இன்று அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மனுவை மின்னஞ்சலில் அனுப்புமாறு நாம் தமிழர் கட்சி வழக்கறிஞருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் நாம் தமிழர் கட்சிக்கு கடந்த சில தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னம் கொடுக்கப்பட்டு வந்தது. இந்த நாடாளுமன்ற தேர்தலில் கரும்பு விவசாயி சின்னம் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வேறு ஒரு கட்சிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து சீமான் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் நாம் தமிழர் கட்சிக்கு ஏன் கரும்பு விவசாயி சின்னத்தை கொடுக்கக் கூடாது? என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், உரிய பதிலை இந்திய தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 26ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் சார்பில் பதிவாளருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இதையடுத்து, கரும்பு விவசாயி சின்ன வழக்கு இன்று அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அப்போது தலைமை நீதிபதி மனுவை மின்னஞ்சலில் அனுப்புமாறு அறிவுறுத்தியுள்ளார். இன்றைய வழக்குகளின் விசாரணை முடிந்த பிறகு மின்னஞ்சலை பார்த்து முடிவு எடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.