ஆளுநருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு : பொன்முடி பதவி விவகாரத்தில் திமுக அதிரடி அறிவிப்பு

பொன்முடி விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் வகையில் செயல்பட்டு வருவதாகவும் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் எனவும் திமுக எம்பி-யான வில்சன் தெரிவித்துள்ளார்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக உயர் நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொன்முடி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் தண்டனையை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் பொன்முடி மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனால், அதற்கு பதில் அளித்துள்ள ஆளுநர், ’உச்ச நீதிமன்றம் பொன்முடி மீதான தீர்ப்பை நிறுத்தித்தான் வைத்துள்ளது. ரத்து செய்யவில்லை. எனவே பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது’ என தெரிவித்தார்.

ஆளுநரின் இந்த கருத்துக்கு திமுகவின் சட்ட ஆலோசகரும் மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

அதில், ‘தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியலமைப்புச் சட்டத்திற்கு சிறிதும் மரியாதை அளிக்காமல் மீண்டும் மீண்டும் தவறு அளிப்பவராக இருந்து வருகிறார். பொன்முடி வழக்கில் உச்ச நீதிமன்றம் அவரது தண்டனையை நிறுத்தி வைத்தபோது, அமைச்சர் பொறுப்பை வகிக்கவோ, சட்டமன்ற உறுப்பினராக தொடரவோ இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காக இடைக்கால உத்தரவு விதிப்பதாக நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இல்லையென்றால் அது சரி செய்ய இயலாத பாதிப்பை உருவாக்கும் என்று தெளிவாக தீர்ப்பி குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அவரது எம்எல்ஏ பதவி நீக்கத்தை ரத்து செய்து அறிவித்தார். மேலும், திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளதாக அறிவித்த அறிவிக்கையும் தேர்தல் ஆணையம் திரும்பப்பெற்றுக் கொண்டது.

எனவே அரசியலமைப்பிற்கு உட்பட்ட அனைத்து நிறுவனங்களும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்பட்டு நடந்துள்ளன. இவை அனைத்தையும் மீறி ஆளுநர் ரவி, உச்ச நீதிமன்றம் தீர்ப்பை நிறுத்தித் தான் வைத்துள்ளது. ரத்து செய்யவில்லை என உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு தனது சொந்த விளக்கத்தை அளித்துள்ளார். இது ஒரு அபத்தமான பொருள் என்பதோடு உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் செயலும் ஆகும்.

உயர் நீதிமன்ற தீர்ப்புக்கும் தண்டனைக்கும் உச்ச நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், அந்த தண்டனை சட்டத்தின் பார்வையில் செல்லத்தக்கது அல்ல. இச்சூழலில் ஆளுநரின் பொருள்கோடலை சட்ட அறியாமையாக மட்டுமல்ல உச்ச நீதிமன்ற அவமதிப்பாகவும் கொள்ள வேண்டி உள்ளது. இதற்காக ஆளுநர் மீது உச்ச நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட வேண்டும்.

எப்போது உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மீறி நடக்கவும், அரசியலமைப்பு முறைகளை களங்கப்படுத்தவும், சட்டத்தின் விதிகளை புறக்கணிக்கவும் தலைப்பட்டாரோ அப்போதே அவர் தான் வகிக்கும் பதவியில் நீடிப்பதற்கான தகுதியை இழந்துவிட்டார். ஆளுநரை உடனே பதவி நீக்கம் செய்து திரும்பப் பெற இந்திய குடியரசுத் தலைவர் அவர்களை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.