விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந் துள்ள ஆண்டாள் கோவில் 108 வைணவத் தலங்களில் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். இங்கு நடைபெறும் திருவிழாக்களில் பங்குனி உத்திரத்தன்று நடக்கும் ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் சிறப்பு வாய்ந்தது.
பங்குனி உத்திர நாளன்று நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். இந்த ஆண்டுக்கான திருக்கல்யாண திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு விசேஷ அலங்காரத்தில் ஆண்டாள் ரெங்க மன்னார் சன்னதியில் வீற்றியிருந்தனர். தொடர்ந்து காலை 9.30 மணிக்கு ரிஷப லக்னத்தில் கொடியேற்று விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கோவில் அர்ச்சகர் சுதர்சனம் பட்டர் கொடியேற்றி கொடிமரத்திற்கு அபிஷேகம் கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜைகளை நடத்தி வைத்தார்.
தொடர்ந்து பூஜையை உடனிருந்து செய்த ரங்கராஜ் என்ற ரமேஷ் பட்டர், சுதர் சன பட்டர், ஐகிரி வாசன் பட்டர், கோபி பட்டர், முத்து பட்டர் சிறப்பாக பூஜைகள் செய்தனர். அப்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆண்டாள், ரெங்க மன்னாரை தரிசித்தனர். இதனைத் தொடர்ந்து வருகிற 25-ந்தேதி இரவு 7 மணிக்கு ஆண்டாள் திருக்கல்யாணம் கோவில் முன்பு உள்ள பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்ட மேடையில் நடைபெறுகிறது. திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு ஆண்டாளும் ரெங்கமன்னாரும் காலை மற்றும் இரவு வேலைகளில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.