த.மா.கா-வைப் பொறுத்த மட்டில் மக்களவைத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் கோட்பாடுகளுக்கு ஏற்றவாறு தேர்தலை நியாயமாக, சுதந்திரமாக எதிர்கொள்ளும்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான தேதியின் அடிப்படையில் நாடு முழுவதும் தேர்தல் நியாயமானதாக, சுதந்திரமாக நடைபெற வேண்டும் என்று பொது மக்கள் எதிர்பார்க்கிறார்கள். குறிப்பாக தேர்தல் ஆணையம் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும், அரசியல் கட்சிகளிடையே பாரபட்சம் கூடாது, சமூக வலைத்தளங்களில் பொய்ப்பிரச்சாரம் கூடாது, புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் உள்ளிட்ட பல விதிமுறைகளை வெளியிட்டு அறிவித்திருப்பதால் அனைத்து தரப்பு மக்களிடம் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் பணவிநியோகம், பரிசுப்பொருட்கள் விநியோகம், ஆட்சி பலம், அதிகார பலம், விதிமீறல்கள், வதந்திகள் ஆகியவற்றிற்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது. இந்நிலையில் த.மா.கா வைப் பொறுத்த மட்டில் 2024 – மக்களவைத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் கோட்பாடுகளுக்கு ஏற்றவாறு தேர்தலை நியாயமாக, சுதந்திரமாக எதிர்கொள்ளும்.
அதாவது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்துள்ள த.மா.கா-வானது கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் வெற்றிக்காக மக்களை நேரிடையாக சந்தித்து, வாக்குறுதிகள் கொடுத்து, ஓட்டு கேட்டு, மீண்டும் மத்தியில் பா.ஜ.க ஆட்சியானது பாரதப் பிரதமர் மோடி தலைமையில் அமைய பாடுபடும்.
நாடு முழுவதற்குமான தேர்தல் என்பதால் வாக்களிக்கும் தகுதி உள்ளவர்கள் அனைவரும் வாக்களிப்பதற்கு முன்வர வேண்டும் என்பதற்கு ஏதுவாக விழிப்புணர்வுடன் தேர்தல் நடைபெற வேண்டும் என த.மா.கா எதிர்பார்க்கிறது. தேர்தல் ஆணையம் அறிவித்தபடி தேர்தலை நியாயமாக, சுதந்திரமாக, மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு ஏற்ப, எந்த ஒரு முறைகேட்டிற்கும் இடம் இல்லாத வகையில், முறையாக நடத்தி, முடிவினை அறிவிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.