சிலப்பதிகாரத்தின் பெருமைகளை இளையோரிடம் கொண்டு செல்லவேண்டும் இளங்கோவடிகள் இலக்கிய மன்ற கூட்டத்தில் ஞானலயா பா.கிருஷ்ணமூர்த்தி வேண்டுகோள்.
புதுக்கோட்டை இளங்கோவடிகள் இலக்கிய மன்ற மாதாந்திர கூட்டம், ஓய்வு பெற்ற காவல் அலுவலர் சங்க அரங்கில், அதன் தலைவர் முரு.வைரமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. வைரமாணிக்கம் தனது 84வது வயதில் சிலப்பதிகாரத்தின் மேல் உள்ள பற்றின் காரணமாக இளங்கோவடிகள் இலக்கிய மன்றத்தைத் தோற்றிவித்தார். தற்போது94 வயதிலும் தொடர்ந்து அதன் புகழை பரப்புவதில் முனைப்பு காட்டி வருகிறார். அவர் தனது தலைமை உரையில் சிலப்பதிகாரம் காப்பியங்களில் தலையாயது. அறவழி வாழ்க்கையை வலியுறுத்தும் காப்பியம். சமூக ஒழுக்கத்தை மேம்படுத்த உதவும் உயர்ந்த இலக்கியம். தற்போதைய இளைஞர்களிடம் அதன் பெருமையை கொண்டு சேர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயம். தமிழ் மொழியின் பயன்பாடு தொடர்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் நல்ல இலக்கியங்களை வாசிக்கும் பழக்கத்தை இளையோர்களிடம் வளரச் செய்யவேண்டும். அந்த வகையில் சிலப்பதிகாரமும் கொண்டு சேர்க்கப்பட வேண்டும் என்றார்.
தொடர்ந்து, ஏழாம் வகுப்பு பயிலும், இலக்கியச் சொற்பொழிவாளர் தீஷா திரவியராஜுக்கு “நற்றமிழ் நாவரசி “என்ற விருது வழங்கி, ஞானாலயா பா . கிருஷ்ணமூர்த்தி சிறப்புரை ஆற்றினார். சிலப்பதிகாரத்தை தமிழ் கூறும் நல்லுலகம் அறியச் செய்தவர்களில் முதன்மையானவர் சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானம் அவர்கள் . மூன்றாம் வகுப்பே பயின்ற ம.பொ.சி, அச்சுக் கோர்க்கும் பணியைத் தொடங்கி, அதன் வழி இலக்கியம் கற்று 120 க்கு மேற்பட்ட நூல்களை ப்படைத்தவர். முதன் முதலில் சிலப்பதிகார மாநாட்டை நடத்தியவர். திருத்தனியையும், சென்னையையும், தேவிகுளம் பீர்மேடையும் பெற்றுத்தந்ததோடு, சிலப்பதிகாரத்தின் பெருமையையும் ஊர்தோறும் சென்று பரப்பியவர். அதே போல சிலம்பொலி செல்லப்பனார். இவர்கள் தமிழ் மொழிக்கு ஆற்றிய சேவையை இன்றைய இளைய தலைமுறை அறியாமல் இருக்கிறது. அவர்கள் அறியச் செய்ய இது போன்ற இலக்கியக் கூட்டங்களை கல்லூரிகளில் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தொடர்ந்து, திலகவதியார் திருவருள் ஆதீனகர்த்தர் தவத்திரு சந்திரசேகர சுவாமிகள் ஆசியுரை வழங்கினார்.
நிறைவாக, நெஞ்சை அல்லும் சிலம்பில் விஞ்சி நிற்பது, அழகியலா? அரசியலா? ஆறவியலா? என்ற தலைப்பில் கவிஞர் நா.முத்துநிலவன் தலைமையில், மகா.சுந்தர், மு.பாலசுப்பிரமணியம். கு.ம. திருப்பதி வாதிட பட்டிமன்றம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மருத்துவர் ராம்தாஸ், மேனாள் வர்த்தகச் சங்கத்தலைவர் சேவியர், மேனாள் ரோட்டரி ஆளுனர் அ.லெ.சொக்கலிஙகம், புலவர் துரை.மதிவாணன், புண்ணியமூர்த்தி, தனபதி, சா.விஸ்வநாதன்,பி.எஸ். கருப்பையா, சுதந்திரராஜன், கவிஞர் தங்கம் மூர்த்தி, சோலச்சி, கவிஞர் கண்ணதாசன், கருணைச் செல்வி, மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்வில், முதலாவதாக நிலவை பழனியப்பன் இறை வணக்கம் பாடினார். இளங்கோவடிகள் இலக்கிய மன்ற பொருளாளர் சத்திய ராம் ராமுக்கண்ணு வரவேற்புரை நிகழ்த்தினார். நிறைவாக துணைச் செயலாளர் கு.சுப்பிரமணியன் நன்றி கூறினார். நிகழ்வை உலகத் திருக்குறள் பேரவை மாநில மகளிர் அணிச் செயலாளார் சந்திரா ரவீந்திரன் தொகுத்து வழங்கினார்.